ஒபாமா செயலற்று இருப்பதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Monday, June 26th, 2017

அமெரிக்காவில் கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா எதுவித கருத்தையும் தெரிவிக்காது செயலற்று இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரஷ்யா தலையீடு செய்யக்கூடும் என ஒபாமா முன்னதாகவே அறிந்திருந்தார் எனவும் ஆனால் அது தொடர்பில் ஒபாமா எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.2016 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தற்போது பாரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதமளவில் ரஷ்ய தலையீடு குறித்து ஒபாமாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது எனவும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஹிலரி கிளின்டனை தோற்கடிக்கும் வகையில் புடின் இணைய பிரசார நடவடிக்கையில் ஈடுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்க தேர்தல் விடயத்தில் தான் சிறிதளவேனும் சம்பந்தப்படவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மறுப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.