ஈரானுக்கு எதிராக தாக்குதல் : உத்தரவினை மீளப் பெற்றுள்ள ட்ரம்ப் !

Saturday, June 22nd, 2019

ஈரானுக்கு எதிராக தாக்குதல் ஒன்றை நடத்துமாறு விடுக்கப்பட்ட உத்தரவினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீளப் பெற்றுள்ளார்.

ஹோமஸ் நீரிணையில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க உளவு வானூர்தி ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்கு எதிர் நடவடிக்கையாகவே அவரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சர்வதேச வான்பரப்பிலேயே இந்த வானூர்தி பறந்து கொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உத்தரவிற்கு அமைவான தாக்குதல் ஆரம்பிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் டொனால்ட் ட்ரம்ப் இந்த தாக்குதல் உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளதாக ‘நியூயோக் ரைம்ஸ்’ தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறுதி நேரத்தில் இந்த தாக்குதலை நிறுத்தியதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, கடுமையான போக்கை கடைப்பிடித்து வருவதுடன், பாரிய பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.

இது தவிர, ஓமான் குடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில், சர்வதேச வான்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான உளவு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு அமெரிக்க ஜனாதிபதி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈரானுக்கு எச்சரிக்கை விடும் நோக்கில் அவர் தமது டுவிட்டர் செய்தி ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

அந்த செய்தியில், இப்படியான செயல்பாட்டுக்கள் மூலம் ஈரான் பாரிய தவறொன்றை இழைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த செய்தியின் ஊடாக இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த பேச்சு வார்த்தையின்போது, அமெரிக்க உளவு வானுஸர்தி ஒன்று சர்வதேச வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Related posts: