அலெப்போவில் தினசரி மூன்று மணிநேர யுத்தநிறுத்தம்!

Friday, August 12th, 2016

சிரியாவில் மோதல்கள் இடம்பெற்றுவரும் அலெப்போ நகரில், தினசரி மூன்று மணித்தியாலங்களுக்கு யுத்தநிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக, ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த யுத்தநிறுத்தம், நேற்று (11) முதல் அமுலுக்கு வருவதாக, நேற்றுமுன்தினம் (10) விடுத்த அறிவிப்பில், ரஷ்யா தெரிவித்தது.

அலெப்போவுக்கான மனிதாபிமான உதவிகள், அங்கு சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்காக இந்த யுத்தநிறுத்தத்தை அமுல்படுத்துவதாக ரஷ்யா அறிவித்ததோடு, இந்த யுத்தநிறுத்த முன்மொழிவு தொடர்பாக ஆராய்வதாக, ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

அலெப்போ நகரானது, அரசாங்கப் படைகளாலும் போராளிகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. போராளிகளால் கட்டுப்படுத்தப்படும் அலெப்போவின் கிழக்குப் பகுதியில், சுமார் 250,000 மக்கள் வாழ்ந்துவருவதாகக் கருதப்படுகிறது. அப்பகுதிக்கான தரைவழிப்பாதையை அரசாங்கப் படைகள் நிறுத்தியதைத் தொடர்ந்து, அந்த மக்களுக்கான உதவிகள் கிடைப்பது, இயலாத ஒன்றாக மாறியது.

இந்நிலையிலேயே, காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை, மோதல் தவிர்ப்பு இடம்பெறுமென, ரஷ்யா அறிவித்துள்ளது.  அத்தோடு, அலெப்போவுக்கான மனிதாபிமான உதவிகளை இணைந்து வழங்குவது குறித்து, ஐக்கிய நாடுகளுடனும் ஐக்கிய அமெரிக்காவுடனும் கலந்துரையாடப்படுவதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது

Related posts: