20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கியது: முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி

Wednesday, March 9th, 2016

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி போராடி ஹாங்காங்கை வீழ்த்தியது.

16 அணிகள் இடையிலான 6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் நேற்று(08) ஆரம்பமானது. இதில் முதலில், முதலாவது சுற்று ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் சுற்றில் களம் காணும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் வங்காளதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன், ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி, பிரதான அணிகள் விளையாடும் சூப்பர்–10 சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் முதலாவது சுற்றின் தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே–ஹாங்காங் (பி பிரிவு) அணிகள் நாக்பூரில் நேற்று மோதின. நாணயச்சுழற்சியிவ் வென்ற ஹாங்காங் கேப்டன் தன்விர் அப்சல் முதலில் ஜிம்பாப்வேயை துடுப்பாடுமாறு கேட்டுக்கொண்டார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. தனது முதலாவது அரைசதத்தை எட்டிய சிபான்டா 59 ரன்களும் (46 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), சிகும்புரா 30 ரன்களும் (13 பந்து, 3 சிக்சர்), வாலெர் 26 ரன்களும், கேப்டன் ஹாமில்டன் மசகட்சா 20 ரன்களும் விளாசினர். ஜிம்பாப்வே அணியில் மூன்று முன்னணி வீரர்கள் ரன்–அவுட் ஆனார்கள். இல்லாவிட்டால் அந்த அணி இன்னும் அதிகமான ரன்களை குவித்திருக்கும்.

தொடர்ந்து ஆடிய அனுபவம் இல்லாத ஹாங்காங் அணி முடிந்த வரை கடுமையாக போராடியது. எதிரணிக்கு ஓரளவு நெருக்கடி அளித்த போதிலும், இலக்கை தொட முடியவில்லை.

20 ஓவர்கள் முழுமையாக தாக்குப்பிடித்த ஹாங்காங் அணி 6 விக்கெட்டுக்கு 144 ரன்களே எடுத்தது. இதன் மூலம் ஜிம்பாப்வே 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாங்காங் அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஜாமி அட்கின்சன் 53 ரன்களும் (44 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் தன்விர் அப்சல் 31 ரன்களும் (17 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர்.

ஹாங்காங் கேப்டன் தன்விர் அப்சல் கூறுகையில், ‘மிடில் ஓவர்களில் நாங்கள் நன்றாக பந்து வீசினோம். ஜிம்பாப்வேயை நாங்கள் 140 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். எங்களது துடுப்பாட்ட திறமையை வைத்து, இந்த இலக்கை எட்டி விட முடியும் என்று நினைத்தேன். ஆனால் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் பவர்–பிளேயில் (24 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தனர்) சிறப்பாக பந்து கட்டுப்படுத்தி விட்டனர். இது தான் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது’ என்றார்.

Related posts: