மேற்கிந்திய தீவுகள் வெற்றி !

Monday, December 16th, 2019


இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பாக ரிஷப் பன்ட் 71 ஓட்டங்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 70 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் கோட்ரெல், போல் மற்றும் ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

இந்நிலையில, 288 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 47.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ஹொப் 102 ஓட்டங்களையும் ஹெட்மையர் 139 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக ஷிம்ரோன் ஹெட்மையர் தெரிவு செய்யப்பட்டார்.3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளதோடு, இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (18) விசாகபட்டனத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts: