ரெய்னா மீண்டும் தேர்வு: முன்னாள் வீரர்கள் வரவேற்பு!
Wednesday, June 20th, 2018
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரெய்னா தேர்வு செய்யப்பட்டதை முன்னாள் வீரர்கள் வரவேற்றுள்ளனர்.
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி 3 ‘டுவென்டி 20’, 3 ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி ஜூலை 12ல் நாட்டிங்காமில் நடக்கிறது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு, 32, இடம்பெற்றிருந்தார். இவர், வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட 16 புள்ளிக்குப்பதில், 14 மட்டுமே எடுத்தார்.
இதனால், இவருக்குப்பதில் ‘சீனியர்’ வீரர் ரெய்னா, 31, தேர்வானார். இதன்மூலம், கடந்த 2015இல் மும்பையில் நடந்த போட்டிக்குப்பின் (தென் ஆப்ரிக்கா) மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.
ரெய்னாவின் தேர்வு, உலக கோப்பையை (2019, இங்கிலாந்து) மனதில் வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,‘‘ ராயுடுவுக்குப்பதில் ரெய்னா, ரிஷாப் இடையே போட்டி நிலவியது. ஏற்கனவே தோனி, தினேஷ் கார்த்திக் இருப்பதால் விக்கெட் கீப்பரான ரிஷாப்பிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. உலக கோப்பையை கணக்கில் கொண்டு, ரெய்னாவை சேர்த்திருக்கலாம். சுழற்பந்துவீச்சிலும் கைகொடுப்பதால், ரெய்னாவின் தேர்வு சிறந்த முடிவு,’’ என்றார்.
இந்திய முன்னாள் கீப்பர் தீப் தேஷ்குப்தா கூறுகையில், ‘‘இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தவானுடன் கூடுதலாக இடதுகை பேட்ஸ்மேன் இருப்பது நல்லது. இதற்கு, ‘ஆல் ரவுண்டர்’ ரெய்னா அல்லது குர்னால் பாண்ட்யா தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருந்தது. அனுபவத்தின் அடிப்படையில் ரெய்னா முந்திவிட்டார். இந்த முடிவை வரவேற்கிறேன்,’’ என்றார்.
Related posts:
|
|