ஐ.பி.எல். தொடர்: மும்பை வெற்றி

Tuesday, April 26th, 2016

ஐ.பி.எல். தொடரின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். தொடரில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டம் மொஹாலியில் நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தெரிவு செய்தது.

மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, பார்த்தீவ் பட்டேல் களமிறங்கினர். ரோகித் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். எனினும் பின்னர் இணைந்த பார்த்தீவ் பட்டேல் மற்றும் அம்பத்தி ராயுடு பொறுப்புடன் விளையாடினர்.

இருவரும் அவ்வப்போது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி ரசிகர்களை திருப்திபடுத்தினர். இந்நிலையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 137 இருந்தபோது 4 சிக்ஸர், 4 பவுண்டரி உட்பட 65 ஓட்டங்கள் எடுத்து ராயுடு ஆட்டமிழந்தார். பின்னர் பட்லர் களமிறங்கினார். அவர் 13 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகள் என 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரில் பார்த்தீவ் பட்டேலும் 2 சிக்ஸர், 10 பவுண்டரி உட்பட 81 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு மும்பை அணி 189 ஓட்டங்களை குவித்தது. பஞ்சாப் தரப்பில் மோஹித் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. எனினும் முரளி விஜய் 19 ஓட்டங்களிலும், மன்னன் வோரா 7 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். பின்னர் இணைந்த சான் மார்ஷ், மேக்ஸ்வெல் அவ்வப்போது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி விக்கெட்டு விழாமல் பார்த்துக்கொண்டனர்.

இருவரும் 10 ஓவர்களுக்கு மேல் நிலைத்து நின்று ஆடினர். இந்நிலையில் 14.6 வது ஓவரில் 1 சிக்ஸர், 3 பவுண்டரி உட்பட 45 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மார்ஷ் ஆட்டமிழந்தார். அடுத்து டேவிட் மில்லர் களம் புகுந்தார். அணியின் ஓட்டங்கள் 139 ஆக இருந்தபோது மேக்ஸ்வெல்லும் 1 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி நேரத்தில் மெதுவாக ஆடியதால் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போனது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டேவிட் மில்லர் 30 ஓட்டங்களுடனும் மோகித் சர்மா ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது

Related posts: