மாலிங்கவை தொடர்ந்து மேலும் ஓர் பிரபல இலங்கை வீரர் மீது குற்றச்சாட்டு!

Friday, October 12th, 2018

இலங்கை கிரிக்கட் வீரர்கள் இருவர் தம்மை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக இந்திய பெண்கள் இருவர் குற்றம்சாட்டியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. முன்னாள் விமான சேவை பணி பெண் ஒருவர் தாம் முகம் கொடுத்துள்ள பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளதை மேற்கோள்காட்டி இந்தியா டுடே  இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் ஒரு சம்பவமாக பல வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இடம்பெற்ற போட்டியின் போது இலங்கை அணி தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் நீச்சல் குளத்திற்கு அருகில் அப்போதிருந்த இலங்கை அணியின் வீரர்களில் ஒருவரான ரணதுங்க என்பவர் தன்னை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக குறித்த பெண் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

எனினும் இந்திய டுடே இணையத்தளம், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க மீதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனுடன் மும்பையை சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு இலங்கை அணியின் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்து பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட ரீதியில் தகவல் அளித்துள்ளார்.

குறித்த பதிவை சின்மயி தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் மும்பையை சேர்ந்த நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.பி.எல் இடம்பெறும் போது ஒரு நட்சத்திர உணவகமொன்றில் தங்கியிருந்தேன்.

அங்கே , எனது தோழியை நான் தேடிய போது உங்கள் தோழி எனது அறையில்தான் உள்ளார் என கூறிய லசித் மாலிங்க என்னை அவரது அறைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சென்று பார்த்ததில் எனது தோழி அங்கு இருக்கவில்லை. பின்னர் , மாலிங்க என்னை அவரது படுக்கையில் தள்ளினார்.

என் மீது விழுந்து என்னை முத்தமிட முயற்சித்தார். அவரின் உடல் எடையுடன் என்னால் போராட முடியவில்லை. நான் எனது கண்களையும் வாயையும் மூடிக்கொண்டேன். இருந்தும்,  லசித் மாலிங்க என்னை முத்தமிட்டார்.

பின்னர் , உணவக ஊழியர்கள் அறையின் கதவை தட்டிய நிலையில், நான் குளியலறைக்குச் சென்று முகத்தை கழுவிக்கொண்டு அவர்களுடன் வெளியேறினேன்.

இது தொடர்பில் நான் வெளியே கூறினால் , பிரபல வீரரின் அறைக்கு நீ எதற்கு சென்றாய் என என் மீது கேள்வி எழுப்புவார்கள் என எனக்கு தெரியும்’ என குறித்த பெண் அதில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்போது இந்தியாவில் பாலியல் கொடுமைகள் தொடர்பில் பலர் சமூகவலைத்தளங்களில் தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில், சிலர், பிரபல நபர்களை தொடர்புப்படுத்தி போலி சம்பவங்களை உருவாக்கி வருவதாக பலர் சமூகவலைத்தளங்கள் ஊடாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts: