நான் எடுத்த சபதம் இதுதான்: மனம் திறந்த சந்திமால்!

Sunday, June 5th, 2016

இலங்கையை விட்டு இங்கிலாந்து கிளம்பும் போது கண்டிப்பாக 2 சதங்கள் அடிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததாக இலங்கை வீரர் சந்திமால் கூறியுள்ளார்.

இலங்கை அணி இங்கிலாந்தில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சந்திமால் 126 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.

இருப்பினும் 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எதிர்வரும் 9ம் திகதி லாட்சில் தொடங்குகிறது.

இந்த தொடர் குறித்து சந்திமால் கூறுகையில், இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்படும் போது நான் என்னை தயார்படுத்திக் கொண்டேன். அப்போது கண்டிப்பாக 2 சதங்கள் அடிக்க வேண்டும் என்று நான் சபதம் எடுத்துக் கொண்டேன்.

இந்த முறை இங்கு ஆடுவது சவாலான விடயமாக இருக்கிறது. ஆனால் நாங்கள் இதற்கு எல்லாம் தயாராக தான் வந்திருக்கிறோம்.

செஸ்டர்-லீ-ஸ்டீர்டில் முதல் நாள் பயிற்சியை தொடங்கும் போது 3 டிகிரி செல்சியஸ் குளிர் இருந்தது. இது போன்ற குளிரை தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னால் துடுப்பாட்ட மட்டையை கூட பிடிக்க முடியவில்லை. கடினமான சூழ்நிலையாக இருந்தது.

கடந்த வருடம் காலி மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக 163 ஓட்டங்கள் எடுத்ததை மறக்க முடியாது. அது போன்று இங்கு செயல்படவேண்டும்.

மேலும், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அபாரமாக பந்துவீசி வருகிறார். அவருக்கு எதிராக சிறப்பாக ஆட வேண்டியது அவசியமானது என்று கூறியுள்ளார்.

Related posts: