தரவரிசையில் பிரேஸில் அணி முதல் 5 இடங்களுக்கு முன்னேற்றம்!

Saturday, September 17th, 2016

உலகக் கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகள் பெருமளவில் இடம்பெற்று வரும் நிலையில் பிஃபாவின் புதிய தரவரிசை பட்டியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
எனினும் ஆர்ஜன்டீனா மற்றும் பெல்ஜியம் அணிகள் தொடர்ந்து முறையே முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களை மற்றொரு மாதத்திற்கு தக்கவைத்துக் கொண்டுள்ளன. பிஃபா தரவரிசை பட்டியல் கடந்த வியாழக்கிழமை புதுப்பிக்கப்பட்டது.

தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் நாடுகளில் ஜெர்மனி ஓர் இடம் முன்னேறி 3 ஆவது இடத்தை பிடித்ததோடு கொலம்பியா ஓர் இடம் சரிந்து நான்காவது இடத்திற்கு வந்தது.
எவ்வாறாயினும் புதிய பயிற்சியாளரான டைடின் கீழ் விளையாடும் பிரேஸில் உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டிகளில் இக்வடோர் மற்றும் கொலம்பிய அணிகளை வென்ற நிலையில் தரவரிசையில் முன்னேற்றம் காண முடிந்துள்ளது. முன்னர் 9 ஆவது இடத்தில் இருந்த பிரேஸில் அணி அதிரடியாக ஐந்து இடங்கள் முன்னேற்றம் கண்டு நான்காவது இடத்தை கொலம்பியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

முதல் பத்து இடங்களை பொறுத்தவரை உருகுவே 3 இடம் முன்னேறி 9 ஆவது இடத்தையும் வேல்ஸ் ஓர் இடம் முன்னேறி 10ஆவது இடத்தையும் பிடித்தது. வேல்ஸின் முன்னேற்றத்தை அடுத்து முதல் 10 இடத்தில் இருந்த ஸ்பெயில் 3 இடங்கள் சரிந்து 11 ஆவது இடத்தை பிடித்ததோடு இத்தாலி 3 இடங்கள் பின்தங்கி 13 ஆவது இடத்திற்கு வந்தது.

இதேவேளை இந்த மாதத்தில் அதிக புள்ளிகளை பெற்ற அணியாகவும் பிரேஸில் இடம்பெற்றுள்ளது. இம்மாதத்தில் பிரேஸில் மொத்தம் 167 புள்ளிகளை பெற்றுள்ளது.

அதேபோன்று தரவரிசையில் அதிக முன்னேற்றம் கண்ட அணியாக பொலிவியா இடம்பெற்றுள்ளது. அந்த அணி 35 இடங்கள் அதிரடியாக முன்னேறி 75ஆவது இடத்தை பிடித்ததோடு மாலாவி 28 இடம் முன்னேறி 99 ஆவது இடத்தையும் பரோஸ் தீவுகள் 24 இடங்கள் முன்னேற்றம் கண்டு 111 ஆவது இடத்தையும் டொமினிக்கன் குடியரசு 24 இடங்கள் முன்னேறி 114 ஆவது இடத்தையும் பெற்றன. இதேவேளை பிஃபாவில் புதிய அங்கத்துவம் பெற்ற ஜிப்ரால்டா மற்றும் கொசோவோ இம்மாதத்தில் தனது முதல் உலகக் கிண்ண ஆரம்ப சுற்று போட்டிகளில் பங்கேற்றன. கொசோவோ வெறும் இரண்டு ஏ போட்டிகளில் விளையாடிய நிலையில் 22 இடங்கள் முன்னேறி 168 ஆவது இடத்தை பிடித்தது. இது தரவரிசையில் ஐந்தாவது மிகப்பெரிய முன்னேற்றமாகஇருந்தது.

மறுபுறம் ஜிப்ரால்டா தனது இரண்டு போட்டிகளிலும் எந்த புள்ளியும் இன்றி 205 ஆவது இடத்தில் உள்ளது. ஜிப்ரால்டா முகம் கொடுத்த முதல் அணியான போர்த்துக்கல் தரவரிசையில் ஒரு இடம் பின்தங்கி 7 ஆவது இடத்தில் உள்ளது. போர்த்துக்கல் அண்மையில் ஐரோப்பிய சம்பியனானமை குறிப்பிடத்தக்கது.

பிஃபா தவரிவை வரலாற்றில் ஒருசில அணிகள் தனது சிறந்த தரநிலையை இம்மாதத்தில் வென்றுள்ளது. கினியா பிசவு 2 இடம் முன்னேறி 73 ஆவது இடத்தையும், சென் கீட்ஸ் நெவிஸ் 4 இடங்கள் முன்னேறி 77 அவது இடத்தையும், கசக்ஸ்தான் 13 இடங்கள் முன்னேறி 83 ஆவது இடத்தையும், கொமொரோஸ் 3 இடங்கள் முன்னேறி 152 அவது இடத்தையும், கொசோவோ 22 இடங்கள் முன்னேறி 168 ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்தன.

முதல் ஐம்பது இடங்களுக்கு முன்னேறிய குறிப்பிடத்தக்க அணிகளாக ஸ்கொட்லாந்து (44), அவுஸ்திரேலியா (45), கிறீஸ் (48) மற்றும் உஸ்பகிஸ்தான் (49) காணப்படுகின்றன.
எனினும் இலங்கை கால்பந்து அணி தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லாமல் 193 ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இலங்கை மொத்தமாக பெற்ற புள்ளிகள் 52 ஆகும். இலங்கையை விடவும் ஆறு புள்ளிகள் குறைவாக பெற்றிருக்கும் பாகிஸ்தான் 194 ஆவது இடத்தில் காணப்படுகிறது.

இதில் இந்திய அணி 152ஆவது இடத்தில் இருந்து 148ஆவது இடத்துக்கு முன்னேறியது. இதற்கு, அண்மையில் மும்பையில் நடந்த புயர்டோ ரியோ அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் வெற்றி பெற்றது காரணமாகும். இதன்மூலம் இந்திய அணி, 17 மாதங்களுக்குப் பின், மீண்டும் முதல் 150 வரிசையில் இடம் பிடித்தது. கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான தரவரிசை பட்டியலில் 147ஆவது இடம் பிடித்தது. கடந்த ஜூலை மாதம் வெளியான தரவரிசையில் 152ஆவது இடத்துக்கு முன்னேறிய இந்திய அணி, கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் 152ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. ஆசிய அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 26ஆவது இடத்தில் உள்ளது.

கடந்த ஒருசில வாரங்களில் மொத்தம் 126 ஏ போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. இதன்மூலம் 2016 இல் விளையாடப்பட்ட மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 623 ஆக உயர்ந்துள்ளது.
அடுத்த பிஃபா தரவரிசை வரும் 2016 ஒக்டோபர் 20 ஆம் திகதி புதுப்பிக்கப்படவுள்ளது.

coltkn-09-17-fr-06161849295_4765973_16092016_mss

Related posts: