தந்திரோபாய ரீதியாக மஹேல உதவலாம் – மத்தியூஸ்
Tuesday, May 10th, 2016இங்லாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர், எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், அத்தொடரில், இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன, உபாய ரீதியாக இலங்கைக்கு உதவலாம் என, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற பின்னர், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராகச் செயற்பட்ட மஹேல ஜெயவர்தன, இறுதியாக, இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரிலும் அவ்வாறு செயற்பட்டிருந்தார். இந்தத் தொடரில் அவர், இங்கிலாந்தின் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேர்முக வர்ணனையாளப் பணியாற்றவுள்ளார். எனவே, இங்கிலாந்து அணியின் வீரர்கள் பற்றிய தகவல்களை, இலங்கைக்கு அவர் வழங்கலாம் என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அஞ்சலோ மத்தியூஸ், ‘சர்வதேசக் கிரிக்கெட்டில் இரகசியங்கள் இல்லை. எங்களிடம் ஏராளமான காணொளிக் காட்சிகள் உள்ளன. எங்களைப் பற்றிய காணொளிகளை அவர்கள் கொண்டுள்ளனர். எனவே, பெரிதான இரகசியங்கள் இல்லை” எனத் தெரிவித்தார்.
எனினும், மஹேலவின் பங்களிப்புக் குறித்து அவர், குறைவாக மதிப்பிட்டிருக்கவில்லை. ‘அங்கு சில, உபாயக் கருத்துகளை மஹேல வழங்க முடியும்” என அவர் தெரிவித்தார். மஹேல தவிர, இலங்கையின் தற்போதைய பயிற்றுநரான கிரஹம் போர்ட், இங்கிலாந்தின் பிராந்திய அணியான சரே அணியின் பயிற்றுநராவார். அத்தோடு, கென்ற் அணியின் கிரிக்கெட் பணிப்பாளராகவும் இதற்கு முன்னர் பணியாற்றியவராவார்.
மறுபுறத்தில், இங்கிலாந்து அணியின் பயிற்றுநரான ட்ரெவர் பெய்லிஸ், உதவிப் பயிற்றுநரான போல் பப்ரேஸ் இருவரும், அதே பதவிகளில் இலங்கை அணிக்காகப் பணியாற்றியவர்களாவர். எனவே, எதிரணிகளைப் பற்றிய ஓரளவு அறிமுகம், இரு அணிகளுக்கும் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
|
|