ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் !

Saturday, April 15th, 2017

மேற்கிந்திய தீவுகள் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் 9 மாதத்திற்குப் பிறகு தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மீளவும், அணியின் தேர்விற்காக மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

32 வயதாகும் டெய்லர் தற்போது 9 மாதங்களுக்குப்பின் மீண்டும் சர்வதேச அணிக்கு திரும்பும் வகையில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுள்ளார்.

இது குறித்து ஜெரோம் டெய்லர் கூறுகையில் ”இன்னும் ஏராளமான போட்டிகள் எனக்காக உள்ளன என்று நம்புகிறேன். மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியில் இடம்பிடித்து இன்னும் ஏராளமான போட்டியில் என்னால் விளையாட முடியும்.

அணி மீளவும் என்னை தேர்வு செய்தால், மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் சிறப்பாக செயல்படுவேன். தற்போது ஏராளமான இளம் வீரர்கள் உள்ளனர்.
அவர்களுடன் இணைந்து என்னுடைய அனுபவத்தால் அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும்” என்றார்.

இதுகுறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் சேர்மன், டெய்லர் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றதை வரவேற்றுள்ளார். டெய்லர் 46 டெஸ்ட் போட்டிகளில் 130 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: