கால்பந்தாட்டத்தில் பற்றிக்ஸீக்கு தேசிய ரீதியில் மூன்றாவது இடம்!

Thursday, December 20th, 2018

இலங்கைப் பாடசாலைகள் கால்பந்தாட்டச் சம்மேளனம் நடத்திய 20 வயதுப் பிரிவு அணிகளுக்கு இடையிலான தபப்பரே வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி மூன்றாம் இடத்தைத் தனதாக்கியது.

கொழும்பு சுகததாச மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து மேரிஸ்ரெலாக் கல்லூரி அணி மோதியது. ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இரண்டு அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தின. நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களின் நிறைவில் இரண்டு அணிகளும் தலா இரு கோல்களைப் பதிவு செய்ததை அடுத்து சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முடிவில் 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தைத் தனதாக்கியது சென்.பற்றிக்ஸ்.

தொடர்ந்து நடைபெற்ற இறுதியாட்டத்தில் கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி அணியை எதிர்த்து ஹமீட் அல்ஹீசைன் கல்லூரி அணி மோதியது. நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களின் நிறைவில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் பதிவு செய்ததை அடுத்து சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 6:5 என்ற கோல் கணக்கில் சென்.ஜோசப் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.

Related posts: