கப்டனாக அனுமதிக்கக் கூடாது – ஷோயப் அக்தர்!

Friday, July 26th, 2019

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் தற்போதைய அணித்தலைவர் சர்பராஸ் அகமதுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அத்துடன் அந்த அணியின் தலைவரின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

குறிப்பாக பாகிஸ்தான் ரசிகர்களே அணித்தலைவர் சர்பராஸ் அகமதுவை சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தரும் அவரை சரமாரியாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில் ‘சர்பராஸை அவரது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்குக்காக மட்டுமே அணியில் வைத்துக் கொள்ள வேண்டும். சர்பராஸ் அகமதுவை அணித்தலைவராக தொடர அனுமதிக்கக் கூடாது.

அவர் எந்த ஒருநாள் டி20 டெஸ்ட் என எந்த கிரிக்கெட் போட்டியிலும் அணித்தலைவராக இருக்கக் கூடாது’ என தெரிவித்துள்ளார். முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சீரமைக்க உள்ளதாக பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

மேலும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இம்ரான் கானின் அறிவுரையைக் கேட்காமல் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சர்பராஸ் அகமது பந்துவீச்சை தெரிவு செய்தார். அந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.

எனவே அக்தரின் தற்போதைய பேச்சையும் வைத்து பார்க்கும்போது சர்பராஸ் அகமது அணித்தலைவர் பதவியில் இருந்து தூக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Related posts: