எதிரணி வீரர் தாக்கியதில் கால்பந்து வீரர் மரணம்

Tuesday, May 24th, 2016

அர்ஜென்டினாவில் மண்டல அளவிலான உள்ளூர் கால்பந்து போட்டியில் ஆடிய போது வீரர் ஒருவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து மரணம் அடைந்துள்ளார். அவரது பெயர் மைக்கேல் பாவ்ரே (வயது 24). இரண்டு குழந்தைகளின் தந்தை. டெபேன்சோர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சான் ஜோர்ஜ் அணிக்காக பாவ்ரே ஆடினார். பந்தை தன்வசப்படுத்த அவர் முயற்சித்த போது, எதிர்பாராதவிதமாக எதிரணி வீரர் ஜெரோனிமோ குயன்டனாவுடன் மோதினார். பாய்ந்து துள்ளி குதித்த போது ஜெரோனிமோவின் கால் அவரது முகம் மீது பலமாக இடித்தது. இதில் கீழே விழுந்த பாவ்ரே பிறகு சுதாரித்து எழ முயற்சித்தார்.

இதற்கிடையே இரு அணி வீரர்கள் இடையே வாக்குவாதம்-தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது இன்னொரு டெபேன்சோர்ஸ் வீரர், பாவ்ரேவின் முகத்தில் குத்து விட்டு கீழே தள்ளினார். இதில் நிலைகுலைந்து மைதானத்தில் சரிந்த பாவ்ரேவை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. இச்சம்பவம் அர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Related posts: