இலங்கை- அவுஸ்திரேலிய டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் மழையால் நிறுத்தம்!

Wednesday, July 27th, 2016

இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 117 ஓட்டங்களில் சுருண்டது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை வருகைதந்துள்ளது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பல்லேகெலேயில் நேற்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் துடுப்பெடுத்தாட தெரிவு செய்தார்.

அதன்படி களமிறங்கி விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 117 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. அவுஸ்திரேலிய தரப்பில் ஹசில்வுட், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஸ்டார்க், ஓ’கீபே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 66 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கவாஜா 25 ஓட்டங்களுடனும், ஸ்டீவன் ஸ்மித் 28 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

Related posts: