இறுதிப் பந்தில் 6 ஓட்டங்கள்  பெற்றார் மோர்கன்: தோல்வியை ஜீரணிக்க முடியாமல் திணறியது மெல்பர்ன் ஸ்டார்ஸ்!

Thursday, January 5th, 2017

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் பிரீமியர் போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து மிரட்டிய மோர்கனால், சிட்னி தண்டர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பிக் பாஷ் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மற்ற நாடுகளைச் சேர்ந்த அணி வீரர்களும் கலந்து கொண்டு விளையாடுவர். அது போன்று போட்டியின் 16 வது ஆட்டத்தில் இன்று சிட்னி தண்டர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக மெக்ஸ்வேல் 22 பந்தில் 34 ஓட்டங்களும், கெவின் பீட்டர்சன் 37 பந்தில் 60 ஓட்டங்களும் குவித்து அசத்தினர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து 167 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி தண்டர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரரான பிலிசார்ட் 5 ஓட்டங்கள், நட்சத்திர வீரர் சேன் வாட்சன் 3 ஓட்டங்கள், பாட்டிர்சன் 28 ஓட்டங்கள் என ஆட்டமிழந்தனர்.

இதனால் ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 43 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை சந்திக்கும் நிலையில் இருந்தது. அதன் பின்னர் வந்த மோர்கன், ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு சிறப்பாக ஆடினார். இதனால் அணியின் எண்ணிக்கை சற்று உயரத்தொடங்கியது.

இவருக்கு ஈடுகொடுத்து ஆடிய ரோகிரர் 20 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் பரபரப்பு ஆரம்பித்தது. விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும் மோர்கன் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை நிறுத்திய படி இல்லை. இதனால் அவர் அரை சதம் கடந்தார்.

ஆட்டத்தின் இறுதி ஓவரில் அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஒரு ஓட்டமும், அடுத்த பந்தில் ஒரு ஓட்டமும் எடுக்கப்பட்டது. இதனால் நான்கு பந்தில் 14 ஒட்டங்கள் தேவைப்பட்ட போது மறு புறம் ஆடிய கம்மின்ஸ் சிக்ஸர் பறக்க விட ஆட்டத்தில் அனல் பறந்தது.

அடுத்த பந்தில் ஒரு ஓட்டமும், அதற்கு அடுத்த பந்தில் 2 ஓட்டமும் எடுக்க, இறுதி பந்தில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் மைதானத்தில் ஆரவாரம் செய்ய, கடைசி பந்தை எதிர்கொண்ட மோர்கன் சிக்ஸர் அடிக்க, சிட்னி தண்டர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: