இங்கிலாந்தை பந்தாடியது பங்களாதேஷ்!

Monday, October 10th, 2016

பங்களாதேஷ் அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில், தலைவர் மஷ்ரபி மோர்தஸாவின் சகலதுறைப் பெறுபேறுகளின் துணையோடு, பங்களாதேஷ் அணிக்கு வெற்றி பெற்றுள்ளது.

மிர்பூர் ஷேரே பங்களா தேசிய விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது. 3 விக்கெட்டுகளை இழந்து 39 ஓட்டங்களுடன் தடுமாறிய அவ்வணி, அதன் பின்னர் 5 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களுடனும் தடுமாறியது. ஆனால், இறுதி நேரத்தில் மஷ்ரபி மோர்தஸாவின் அதிரடியால், ஓரளவு போட்டித்தன்மையான நிலையை, அவ்வணி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் மகமதுல்லா 75 (88), மஷ்ரபி மோர்தஸா 44 (29), மொஷாடிக் ஹொஸைன் 29 (49), நசீர் ஹொஸைன் ஆட்டமிழக்காமல் 27 (27) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், அடில் றஷீட்,ஜேக் போல் மூவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

239 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 44.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 34 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து 26 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, 5ஆவது விக்கெட்டுக்காக 69 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், பின்னர் விக்கெட்டுகளை இழந்து, 8 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்கள் என்ற நிலைக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்கள் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டது. இறுதி விக்கெட்டுக்காக றஷீட்டும் ஜேக் போலும் போராடிய போதிலும், தோல்வியைத் தவிர்க்க, அவர்களால் முடிந்திருக்கவில்லை.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் ஜொஸ் பட்லர் 57 (57), ஜொனி பெயர்ஸ்டோ 35 (53), அடில் றஷீட் ஆட்டமிழக்காமல் 33 (44), ஜேக் போல் 28 (22) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மோர்தஸா 4, தஸ்கின் அஹ்மெட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக, மோர்தஸா தெரிவானார். இத்தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், தொடரானது தற்போது, 1-1 என்ற கணக்கில் சமநிலையில் காணப்படுகிறது.

article_1476101639-InMortaza-2_10102016_GPI

Related posts: