ஆப்கானிஸ்தான் அணியிடம் கிண்ணத்தை கொடுத்த இந்தியா – கண்ணீர் விட்ட  ரசிகர்கள்!

Saturday, June 16th, 2018

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பின்பு தொடருக்கான கிண்ணத்தை இந்திய அணியின் தலைவர் ரகானே ஆப்கானிஸ்தான் அணியிடம் கொடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 474 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் முரளி விஜய் 105 ஓட்டங்களும் ஷிகார் தவான் 107 ஓட்டங்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.ஆப்கானிஸ்தான் அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்  இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சீட்டு கட்டு போல் அடுத்தடுத்து சரிந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியில் மொகமது நபி எடுத்த 24 ஓட்டங்களே அதிகபட்சம் ஓட்டம்  மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றினர். இதனால் அந்தணி 109 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ ஆன் ஆனது.

இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டும்  இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பலோ ஆன் ஆனதால் இந்திய அணி மீண்டும் ஆப்கானிஸ்தான் அணியே துடுப்பெடுத்து ஆட கூறியதால்  இரண்டாவது இன்னிங்சிலும் ஆப்கானிஸ்தான் அணி  103 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆகி 262 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.

இதில் இரண்டாவது இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் சகிடி 36 ஓட்டங்களும்  அஸ்கர் ஸ்டானிகிசை 25 ஓட்டங்களும் எடுத்தனர். முதல் இன்னிங்ஸில் அஸ்வின் என்றால் இரண்டாவது இன்னிங்ஸில் நான் என்பது போல் ரவீந்திர ஜடேஜா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 1 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. போட்டியின் முடிவுக்கு பின் இந்திய அணியின் தலைவரான ரகானேவுக்கு தொடருக்கான கிண்ணம் கொடுக்கப்பட்டது.

அப்போது அவர் உடனடியாக ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்களையும் அழைத்து போஸ் கொடுத்தார். அந்த சமயத்தில் வழங்கப்பட்ட கிண்ணத்தையும் அவர்களிடம் கொடுத்து அழகு பார்த்தார். இதை கண்ட மைதானத்தில் இருந்த ஆப்கான் ரசிகர்கள் சிலர் உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டனர்.

Related posts: