அயர்லாந்து அணியை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!

Sunday, May 12th, 2019

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணி நிர்ணயித்த 328 ஓட்டங்கள் இலக்கினை, வெஸ்ட் இண்டீஸ் 48 ஓவர்களிலேயே விரட்டி அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, வங்கதேச அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் 4வது ஆட்டம் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் அயர்லாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியில் ஜேம்ஸ் மெக்கல்லம் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய ஆண்ட்ரூ பால்பிரினி அதிரடியில் மிரட்டினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய பவுல் ஸ்டெர்லிங் அரைசதம் அடித்தார்.

அணியின் ஸ்கோர் 165 ஆக இருந்தபோது ஸ்டெர்லிங் 98 பந்துகளில் 2 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த போர்ட்டர்பீல்டு 3 ஓட்டங்களில் வெளியேறினார். அதன் பின்னர் கெவின் ஓ பிரையன் களமிறங்கினார். இதற்கிடையில் ஆண்ட்ரூ பால்பிரினி சதம் விளாசினார்.

அவர் 124 பந்துகளில் 4 சிக்சர்கள், 11 பவுண்டரிகள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். எனினும் கெவின் ஓ பிரையன் மற்றும் மார்க் அடைர் ஆகியோர் அதிரடியில் மிரட்டினர். இவர்களின் ஆட்டத்தினால் அயர்லாந்து அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 327 ஓட்டங்கள் குவித்தது. கெவின் ஓ பிரையன் 40 பந்துகளில் 63 ஓட்டங்களும், மார்க் அடைர் 13 பந்துகளில் 25 ஓட்டங்களும் விளாசினர்.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஷாய் ஹோப் 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டேரன் பிராவோ 17 ஓட்டங்களில் அவுட் ஆனார். எனினும் பின்னர் வந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் விகிதம் வேகமாக உயர்ந்தது.

ரோஸ்டன் சேஸ்(46)ஆட்டமிழந்தார். இதற்கிடையில் தொடக்க வீரர் சுனில் அம்பிரிஸ் சதம் விளாசினார். அணியின் ஸ்கோர் 252 ஆக உயர்ந்தபோது சுனில் அம்பிரிஸ் 148 (126) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ஹோல்டர்(36), ஜோனதன் கார்டர்(43) ஆகியோரின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 331 ஓட்டங்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.

Related posts: