5 வருடங்கள் வரை காத்திருப்பு – மரமுந்திரிகைச் செய்கையாளர்கள் மானியம் வழங்கக் கோரிக்கை!

Sunday, January 20th, 2019

வடமாகாணத்திலுள்ள மரமுந்திரிகைச் செய்கையாளர்கள் தமது பயிர்ச் செய்கையின் முழுமையான பயனைப் பெறுவதற்கு 5 வருடங்கள் காத்திருக்கவேண்டியுள்ளதால் ஏனைய பயிர்ச்செய்கைக்கு வழங்கும் மானியம் போல் தமக்கும் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாகாணத்தில் தற்போது 200 பேர் வரை இச் செய்கையில் ஈடுபடுவதாகவும் யாழ். மாவட்டத்தில் சாவகச்சேரி, மருதங்கேணி ஆகிய பிரதேசங்களிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேசங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்றுப் பிரதேசத்திலும் மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம், தாள்பாடு, முழங்காவில் ஆகிய பிரதேசங்களிலும் அதிகளவு பயிரிடப்பட்டபோதும் முல்லைத்தீவு மாவட்டமே சுமார் நூறு செய்கையாளர்களைக் கொண்ட மாவட்டமாக உள்ளது.

இச் செய்கையாளர்களுக்குத் தேவையான மரமுந்திரிகைக் கன்றுகளும் மூன்று வருட ஆலோசனை வகுப்புக்களும் வழங்கப்பட்ட போதும் ஒரு ஏக்கர் மரமுந்திரிகையை  ஒரு வருடத்துக்குப் பராமரிப்பதற்கு 80 ஆயிரம் ரூபாய் வரை செலவிடுவதாகவும் இதனால் தாம் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

மரமுந்திரிகைக் கன்று ஒன்றை ஆரம்பத்திலிருந்து வளர்த்தெடுப்பதற்கு வருடத்திற்கு இரு தடைவ உரங்களை இடவேண்டியுள்ளது. ஆனால் தனியார் கடைகளில் 2500 தொடக்கம் 3 ஆயிரம் ரூபா வரை உர வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் மரமுந்திரிகைப் பூவை பூச்சிகள் தாக்குவதால் தாம் சிறந்த அறுவடையைப் பெற முடியாமல் உள்ளதாகவும் இதற்குத் தேவையான மருந்து வகைகளைக் கொள்வனவு செய்யும் போது ஒரு ஏக்கருக்கு இரண்டு தடவைகள் விசுறுவதற்கு 20 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுவதாகத் தெரிவித்தனர்.

எனவே மரமுந்திரிகைச் செய்கைக்குத் தேவையான மருந்துகள், உர வகைகளை கொள்வனவு செய்வதற்காக மானியம் அல்லது வங்கிக் கடன்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts:

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அவுஸ்திரேலியவுடன் ஜனாதி...
யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்பாட்டால் 10 பேர் உயிரிழப்பு - இரண்டு மாத கால பகுதிக்குள் சிகிச்சை மை...
வடக்கு - கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் இரவில் அவ்வப்போது மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர...