4 வயது சிறுவன் உயிரிழப்பு – வீதியை புனரமைத்து தருமாறு வெளிஓயா மக்கள் போராட்டம்!

Tuesday, January 3rd, 2023

எமக்கான வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம்.” இவ்வாறு அட்டன், வெளிஓயா – 22 ஆம் தோட்டப் பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

அட்டன், வெளிஓயா 22 ஆம் இலக்க தோட்டத்தில் உள்ள 4 வயது சிறுவன் ஒருவர் நேற்று (02.01.2023) உயிரிழந்துள்ளார். சுகவீனமுற்றிருந்த குறித்த சிறுவனை, உரிய நேரத்துக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் இருக்கவில்லை. வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் வெளியில் இருந்துகூட வாகனத்தைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையிலேயே இதற்கு மேலும் மக்கள் சாவதற்கு இடமளிக்க முடியாது எனவும், வீதியை உடன் புனரமைத்து தருமாறு வலியுறுத்தியும் தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறார்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

சுமார் 2 கிலோ மீற்றர் வரையான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் மழைக்காலங்களில் பாடசாலை மாணவர்கள், உயிரை கையில் பிடித்துக்கொண்டே பயணிப்பதாகவும், இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

சிறுவனின் மரணத்துக்கு இந்த வீதியும் ஒரு காரணம். இனியும் மக்களை பலிகொடுக்க நாம் தயாரில்லை. எமக்கான வீதி புனரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசியல்வாதிகளை தோட்டத்துக்குள் விட மாட்டோம்.” – எனவும் தோட்ட மக்கள் எச்சரிதுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: