22 ஆவது திருத்த சட்டத்தின் இறுதி நகல் இன்று அமைச்சரவையில் – அங்கீகரிக்கப்பட்டதும் இன்றிரவே வர்த்தமானியில் வெளியாகும் சாத்தியம் என தகவல்!

Monday, June 27th, 2022

நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை இல்லாதொழிப்பதுடன்  ஜனாதிபதி தன்னிச்சையாக எடுக்கும்  தீர்மானங்களுக்கு நாடாளுமன்றம்  மற்றும் பிரதமரின் அனுசரணையை  பெற்றே தீர்மானம் எடுக்கவும்  புதிய சட்டத்தில் பரிந்துரை

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தின் இறுதி நகல் இன்று நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியள்ளன.

அத்துடன் இதற்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதோடு அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் அதனை இன்று இரவு வர்த்தமானியில் பிரசுரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது உட்பட 8 பிரதான விடயங்கள் 22 ஆவது  அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் நீக்கப்பட்டு பிரதமர் உள்ளிட்ட நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்கள் மாற்றப்படுவதோடு பிரதமரின் ஆலோசனையுடனே ஜனாதிபதி அனைத்து விடயங்களையும் எடுக்க வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை இல்லாதொழிக்கவும் பிரேரிக்கப்பட்டுள்ளதோடு சர்வஜன வாக்கெடுப்பு இன்றி நாடாளுமன்றத்தில் மாத்திரம் நிறைவேற்றப்படக்கூடிய திருத்தங்களே இந்த சட்டமூலத்தினூடாக முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த யோசனை தனிநபர் பிரேரணையாக ஐக்கிய மக்கள் சக்தியினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டது.

இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த வாரம் சபாநாயகரினால் சபையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 22 ஆவது திருத்த யோசனை அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற குழுக்களுடனும் சிவில் அமைப்புகளுடன் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கடந்த நாட்களில் ஆராய்ந்தார்.

இதன்படி திருத்த நகலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜனாதிபதி முன்வைத்த திருத்தமும் இதில் உள்ளடக்கப்பட்டுதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த யோசனை சட்டமா அதிபர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டு புதிய நகல் சட்டமூலம் தயாரிக்கப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவித்தது.

இந்த நிலையில் இறுதி சட்ட நகல் நீதி அமைச்சரினால் இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னர் முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சு பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் மக்கள் ஆட்சேபனை முன்வைப்பதற்காக 7 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட இருப்பதோடு இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

யாராவது வழக்கு தொடரும் பட்சத்தில் 21 தினங்களுக்குள் உச்சநீதிமன்றம் அது குறித்து ஆராய்ந்து அதன் தீர்ப்பை சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும். தீர்ப்பிற்குப் பின்னர் சட்டமூலம் சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்லாத வகையில் புதிய சட்ட நகல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த செயற்பாடுகள் பூர்த்தியாக 35 நாட்களுக்கு மேல் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த செயற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதே வேளை ,புதிய சட்ட மூலத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு பொதுஜன பெரமுனவில் உள்ள சில எம்பிகளும் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.

இருந்தபோதும் இதனை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் சுயாதீனமாக செயற்படும் ஆளும் தரப்பு கட்சிகளும் சுதந்திரக்கட்சி எம்.பிக்களும் எதிரணியில் உள்ள வேறு சில எம்.பிக்களும் இதனை ஆதரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படகின்றது.

இதே வேளை 22 ஆவது திருத்தமாக புதிய சட்ட மூலம் நர்தளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தமாகவே அது அரசியலமைப்பில் உள்வாங்கப்படும் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: