2022 ஆம் ஆண்டில் தேயிலை பயிர்ச் செய்கையின் மறுமலர்ச்சி – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, December 1st, 2021

அடுத்த இரண்டு வருடங்களுக்குள் பயிரிடப்படாத அனைத்து அரச காணிகளிலும் தேயிலை செய்கையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் ஆகிய இரண்டு அரச நிறுவனங்களும் பாரிய நட்டத்தில் இயங்கி வருகின்றன. இதில் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பயிர்ச்செய்கையை முறைப்படுத்தி வருவதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியதன் மூலம் நட்டத்தில் இயங்கும் இரண்டு நிறுவனங்களும் நட்டத்தை குறைக்க முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், மவுன்ட்சின் தோட்டத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அனைத்து தோட்டங்களின் கட்டுப்பாடும் முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பல வருடங்களாக மீள்பயிரிடப்படாத காணிகள் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் தேயிலை பயிர்ச்செய்கையின் மறுமலர்ச்சிக்காக இந்த அனைத்து தோட்டங்களிலும் மீண்டும் தேயிலை பயிரிடுவதற்கு தேவையான அனைத்து மானியங்களையும், அதாவது செடிகள் மற்றும் உரம் போன்றவற்றை இலவசமாக வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்ககது.

Related posts: