20 ஆவது திருத்தச் சட்டத்தை அப்படியே நிறைவேற்ற வேண்டும் – அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, September 19th, 2020

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வதாக நாட்டுக்கு கூறியதாகவும் அதில் ஒரு பகுதியை வைத்துக்கொள்வதாக வாக்குறுதி வழங்கவில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கான பொறுப்பை தான் ஏற்பதாகவும், இதில் திருத்தங்களை செய்யாது அப்படியே நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திருத்தச் சட்டத்தை செய்ய முடியாது என்றால், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அப்படியே முன்னெடுத்து 20 ஆவது திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற்று, புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும்வரை முன்னோக்கி செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் 20 அவது திருத்தச் சட்டம் தொடர்பாக சில நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20 அவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய பின்னர், கொண்டு வரப்படும் அரசியலமைப்புச் சட்டத்தில் குறைப்பாடுகளை தீர்க்கலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: