13 ஆவது திருத்தச் சட்டம்தான் தீர்வை நோக்கிய ஆரம்பப்படி என்பது நிதர்சனமாகி வருகின்றது – ஈ.பிடி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, December 5th, 2023

அமிழ்ந்துபோயிருந்த 13 ஆவது திருத்தச்சட்டம் பேசாப்பொருளாகியிருந்த நிலையிலும் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திலும் அறிக்கைகள் மூலமும் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு  13 ஆவது திருத்தச் சட்டம்தான் தீர்வை நோக்கிய ஆரம்பப்படி என நாம் வலியுறுத்திவந்தது நிதர்சனமாகி வருவதாக ஈழ மக்கள் ஜநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் இது தொடரபில் மேலும் கூறுகையில் –

சமீபத்தில் புதுதில்லியில் சில இந்து அமைப்புகள் புலம்பெயர் சிவில் அமைப்பினர், வடக்கு கிழக்கின் சில அரசியல் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடி தமிழ் மக்கள் அரசியல் உரிமைபெற இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா தலையீடு செய்யவேண்டும். என கூட்டாக வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

முன்பதாக கிழக்கு மாகாணம் அரச தரப்பினரால் விடுவிக்கப்பட்டதும் தேர்தல் மூலம் மாகாண அதிகாரத்தை மக்களிடம் வழங்குமாறு நாம் கோரியிருந்தோம். குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வடக்கு – கிழக்கை சேர்ந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்று நாடாளுமன்றத்தை அலங்கரித்திருந்தாலும் தனி ஒரு நபராக இருந்து அதனை நாம் வலியுறுத்தியிருந்தோம்.

இதேவேளை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டில் இலங்கையின் நிர்வாக அலகு மாவட்ட அலகாகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்போது கூட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவ்விதமான கருத்தையும் தெரிவித்திருக்கவில்லை.

ஆனால் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே குறித்த கருத்து சிறீலாங்கா சுதந்திரக்க கட்சியின் நிலைப்பாடு என்றும் எமது நிலைப்பாடு இலங்கையின் நிர்வாக அலகு மாகாண நிர்வாக அலகாகவே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.

இதேபோன்று வடக்கு மாகாணத்திலும் பேசு பொருளாக இருந்த 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வெண்டும் என்கின்ற நோக்கில் யார் ஆட்சிக்கு வருகின்றர்கள் என்பது முக்கியமல்ல மாகாண முறைமையை பாதுகாக்க வேண்டும். அது ஜனாநயக ரீதியில் மக்களிடம் ஆட்சி செய்ய வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் வடக்கு மாகாணசபை தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தியிருந்தோம்.

தேர்தல் நடத்தப்பட்டு வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்கு விசேடமாக 5 ஆயிரத்து 500 மில்லியன் நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டது. ஆனால் குறித்த நிதியை ஆட்சி செய்தவர்கள் தமது இயலாமையால் முயைாக மக்களுக்கானதாக கொண்டு சேர்க்கவில்லை என்பதும் வரலாறு.

இதனிடையே மாகாணங்களுக்கு அதிகாரங்களை குறைப்பதற்கு ஜேவிபி, சிஹல உறுமய, ஜாதிக ஹெல உறுமய போன்ற தென்னிலங்கை இனவாதக் கட்சிகள் முயன்றபோதும் தென்னிலங்கையை சேர்ந்த சகோதர மொழி பேசும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முஸ்லிம் மலையக கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் 50 மேற்பட்ட கையொப்பங்களை பெற்று அந்த முயற்சியை தடுத்து நிறுத்தியிருந்தோம்.  

நாட்டில் யுத்தம் வலுவாக இருந்த நிலையிலும் நாம் இதனையே வலியுறுத்தியிருந்தோம். ஆனால் இப்போது இவர்கள் காவடி எடுத்துள்ளனர். ஜனாதிபதி அழைத்தும் போகாத இவர்கள் அதனை கிடப்பில் போட்டுவிட்டு பின்னர் ஈஸ்ரர் தாக்குதல் குறுந்தூர் மலை விவகாரம், வெடுக்குநாறி ஆலய விவகாரம் என அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளை காரணம் காட்டி அடிப்படை பிரச்சினையை தீர்க்க முன்வராதிருந்தனர்.

இதனிடையே ஐநா மனித உரிமை பேரவையும் 13 ஆவது வரைபைத்தான் நடைமுறைப் படுத்துமாறு கோருகின்றது. இப்போது இவர்கள் புதுடெல்லிக்கு சென்று இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கோருவது இதயசுத்தியுடன் உண்மையானதாக இருக்குமாயின் அதனை முதலில் நாமே வரவேற்போம்.

13 ஆவது திருத்த சட்டமானது இலங்கையின் அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட்ட விடயம் என்பதால் இதை நடைமுறைப்படுத்தவதில் தடை ஏதும் இருக்கப்போவதில்லை. ஆனால் புதிதாக ஏதாவதொன்று வருமாயின் அது கடும் வாதப்பிரதிவாதங்கள் மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என பல பிரச்சினைகளை எதிர்கொண்டு காலதாமதமாக வாய்ப்பிருக்கின்றது

எனவே நாம் நீண்டகாலமாக வலியுறுத்திவரும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் எந்த தடையும் இருக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தம குறிப்பிடத்தக்கது.

000

Related posts: