வெறிச்சோடிய கொடிகாமம் – கடமையில் பாதுகாப்பு தரப்பினர்!

Wednesday, May 5th, 2021

கொடிகாமம் பிரதேசத்தில் அதிக அளவு கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டதை அடுத்து கொடிகாமம் பிரதேசத்தில் இரு கிராம சேவையாளர் பிரிவுகள் நேற்றிரவுமுதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு தரப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கொடிகாமம் பொதுச்சந்தை மற்றும் கடைத்தொகுதி மூடப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது. கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரு கிராம சேவையாளர் பிரிவுகளுமே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.

கொடிகாமம் சந்தை, வர்த்தக நிலையங்களில் அதிகளவு கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, சந்தை, வர்த்தக நிலையங்களில் அதிகளவில் பணியாற்றுபவர்களை கொண்ட இரண்டு கிராம சேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளிலுள்ள அனேகமான குடும்பங்களில் ஒருவரோ, பலரோ சந்தை, வர்த்தக நிலையத்துடன் தொடர்புபட்டவர்கள்.

இதன் காரணமாக அந்த பகுதியை முடக்கி, தொற்றாளர்கள் முழுமையாக அடையாளம் காணப்படா விட்டால் பெரிய கொத்தணியாக உருவாகும் அபாயமிருந்ததையடுத்து, அப் பகுதிகள் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இரு கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் வெளியில் செல்வதற்கோ அல்லது வெளியில் உள்ளவர்கள் அந்தக் கிராமங்களுக்குச் செல்வதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் பொலிசார் அறிவித்துள்ளனர்.

மேலும் அப் பகுதியிலுள்ள தொற்றாளர்கள், சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களிற்கு சென்று வந்தவர்களை இன்றிலிருந்து அடையாளம் காணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts: