வீடமைப்பை ஆரம்பிக்கும் போதே குறித்த கட்டத்திற்கான தவணைக் கொடுப்பனவை செலுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, December 9th, 2020

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நான்கு வீடமைப்புத் திட்டங்களுக்கு பயனாளிகளுக்கு பணம் செலுத்தும் பொறிமுறையை திருத்தம் செய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கான வீடமைப்புக்காக ஒரு கருத்திட்டத்திற்காக 300 மில்லியன் இலங்கை ரூபா வீதம் 04 கருத்திட்டங்களை மேற்கொள்வதற்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் மேற்கொள்ளப்படும் குறித்த திட்டத்தின் பயனாளிகள் குறித்த கட்டுமானப் பணிகளுக்கான செலவுகளைப் கட்டம் கட்டமாக பூர்த்தி செய்த பின்னர் தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலம் இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு சமர்ப்பிக்கும் முன்னேற்ற அறிக்கையின் பிரகாரம் குறித்த பணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அவ்வாறு மேற்கொள்வதற்கு குறித்த பணத்தொகை பயனாளிகளிடம் இன்மையால், திட்டத்தின் முன்னேற்றம் மிகக் குறைவாகவேயுள்ளது. அதனால் வீடமைப்பு ஆரம்பிக்கும் போதே குறித்த கட்டத்திற்கான தவணைக் கொடுப்பனவை செலுத்துவதற்கும், அதன் பின்னர் கட்டுமானத்தின் முன்னேற்றத்திற்கமைய தவணைக் கொடுப்பனவுகளை விடுவிப்பதற்கும், இந்திய உயர்ஸ்தானிகராலயம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: