விவசாயப் புரட்சியின்மூலம் நாம் சாதிக்க முடியும் – ஈ.பி.டி.பியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டின் ஜெயா!

Monday, May 29th, 2017
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கும் மட்டக்களப்பு கற்சேனை, பன்சேனை, பாவற்கொடிச்சேனை, 8ஆம் கட்டை உன்னிசை, முனைக்காடு, கரவெட்டியாறு, உன்னிசை ஆகிய கிராமங்களின் கிராமிய அபிவிருத்திச் சபை உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் உரையாற்றிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளரும், கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளருமான மாட்டின் ஜெயா, நான் வாக்குக் கேட்டோ, தேர்தல் காலத்திலோ உங்கள் முன் வந்து நிற்கவில்லை. மாறாக, யுத்த ரணங்களுடன் வேலைவாய்ப்பற்ற சூழலில் மிகவும் வறுமைக்கோட்டிற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் நலத்திட்டங்கள் தொடர்பாக ஆராயவும், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் அண்மைக்கால அறிவுறுத்தல்களுக்கு அமைய விடுபட்டுப்போன எமது மக்களின் உறவை கரங்களுடன் கரம் சேர்த்து அவர்களுக்காக உழைக்க வேண்டும் என்ற அவருடைய ஆவலை பூர்த்தி செய்யவுமே நான் இங்கு வந்துள்ளேன்.
எமது மக்களின் நலத்திட்டங்களை அல்லது அவர்சார்ந்து சிந்திப்பவர்கள் யாராக இருப்பினும், உங்கள் கரங்களுடன் அவர்கள் கரங்களை இறுகப்பற்றிக்கொண்டு எமது மக்களுக்குப் பணி செய்ய நீங்கள் திடசங்கற்பம் பூண வேண்டும் என்பதே எனது ஆசை. நீங்கள் வாழும் கிராமங்களில் எந்தவொரு தொழிற்சாலையோ வேலைவாய்ப்புகளோ பெற்றுக்கொள்ள முடியாத சூழல் நிலவுவதை நான் நன்கறிவேன்.
முன்னேறிய பல நாடுகள் விவசாயத்தில் பல புரட்சிகள் செய்து, சாதனைகள் படைத்துள்ளதை நீங்களும் நானும் அறிவோம். எம்மக்களாகிய நீங்கள் விவசாயத்தை முற்றுமுழுதாக நம்பி வாழ்பவர்களாக இருப்பதனால் அதில் புதிய விஞ்ஞான, தொழில்நுட்பங்களைப் புகுத்தி, எமது மக்கள் பலத்தை அணிதிரட்டி, புதியதோர் விவசாயப் புரட்சியை நாம் எமது மண்ணில் நிகழ்த்திக்காட்ட முடியும்.
அதனூடாக ஆயுதம் மூலம் சாதிக்க முடியாததை எமது மக்களின் வாழ்வை மேம்படுத்த பொருளாதார அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதன் மூலம் இதர விடயங்களை, உரிமையைக் கூட சமமாக அனுபவிக்கும் சூழலை, இந்த விவசாயப் புரட்சியின்மூலம் நாம் சாதிக்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எமக்கிருக்கின்றது.
யாழ். மண்ணில் கடந்த இரு தசாப்தங்களாக எமது தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட எமது சமூகம் சார்ந்த பல நலத்திட்டங்களை எமது மக்கள் இன்று நிறைவாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப்போன்று வளமானதொரு சூழலை கிழக்கு மண்ணில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த காலப் பகுதியில் இம்மக்களுடன் அவர் வாழ்ந்த நினைவுகளுடன் முன்னெடுத்துச் செல்வதே அவருடைய கனவாக இருக்கிறது.
அவருடைய தாரக மந்திரமான முயல்வோம், வெல்வோம், உளம் சோரோம் என்ற அந்த உன்னத கோட்பாடுடன் உங்களுக்காக உழைக்க உறுதிகொண்டுள்ள எம்முடன் கரம் சேர்க்க இன்றே தயாராகுங்கள் – என்றார்.
18765523_1426962887342794_448764545_o

Related posts: