வித்தியாவின் கொலை வழக்கு: விசாரணைகள் செய்து பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே மரபணு அறிக்கை!

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுப் பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே மரபணு அறிக்கை தொடர்பில் கூற முடியும் என ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் நேற்று (15) தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம- 18 ஆம் திகதி வழக்குத் தவணையில் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கின் மரபணு அறிக்கை தொடர்பில் விபரம் வெளியிடவேண்டும் என மாணவி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சுகாஷ் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார். மேலும் ‘கொட்டதேனியா சேயா கொலை வழக்கில் உடனே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் இன்னமும் தீர்ப்பு வழங்கப்படாதிருப்பதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்’ என மாணவி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சுகாஷ் இதன்போது தெரிவித்தார்.
இந்த விண்ணப்பம் தொடர்பில் நீதவான் பதிலளிக்கையில்,
‘வழக்குத் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொண்டு பரிசீலனை செய்து தான் அறிக்கை தொடர்பில் கூற முடியும். அதிருப்தியடையும் மக்கள் தாங்களாக முன்வந்து இந்த வழக்கின் ஆதாரங்களைச் சொல்ல வேண்டும். அப்போது தான் நீதி கிடைக்கும். குற்றம் செய்யாதவர்களுக்குத் தண்டனை வழங்கினால், அது அநீதி.
தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தாங்கள் இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை எனக் கூறுகின்றனர். இந்தக் கொலை தொடர்பில் தெரிந்தவர்கள் இரகசியமான முறையில் கூட சாட்சியங்களை அளிக்க முடியும்.
சாட்சியாளர்களுக்கு நூறு சதவீதமான பாதுகாப்பை நீதிமன்றம் வழங்கும். இந்தக் குற்றத்தை யார் செய்தாலும் இறைவனின் பாரிய தண்டனைகளிலிருந்து அவர்கள் தப்ப முடியாது என்றார். இதன்பின்னர் இந்த வழக்குத் தொடர்பான விசாரணையை எதிர்வரும் -29ஆம் வரை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார்.
Related posts:
|
|