வழிகாட்டத் தெரியாதவர்கள் தாமாகவே விலகிச் செல்ல வேண்டும் – ஊடக சந்திப்பில் ஈ.பி.டி.பி கருத்து!

அரசியல் அதிகாரங்களை மக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு மக்கள் பணி செய்யத்தெரியாது மக்களை வெறுவிலிகளாக்கிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அந்தப் பதவிகளை விட்டு விலகி மக்கள் சேவையை நேர்மையாகவும் உண்மையாகவும் செய்பவர்களுக்கு வழிவிடவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் மற்றும் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் இன்றையதினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
மிக மோசமான யுத்தத்திற்கு முகங்கொடுத்து பல வலிகளுடன் எமது மக்கள் இன்று வாழ்ந்து வருகின்றனர். பல இயக்கங்களினதும் பொதுமக்களினதும் எத்தனையோ உயிர் தியாகங்களூடாக பெறப்பட்ட வடக்கு மாகாணசபையை இன்று ஆளுகைக்குள் வைத்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அதனூடாக மக்களுக்கு எதுவும் கிடைக்கப்பெறாத வகையில் வெற்று பேச்சு பேசும் விவாத மேடையாக வைத்துள்ளனர். தவிர மக்கள் நலன் சார்ந்த தேவைகளை ஆட்சி முடிவடையும் காலத்தில் கூட மேற்கொள்ளவில்லை என்பதே வேதனையாக உள்ளது.
மேலும் அமைச்சர்கள் நியமனங்கள் தொடர்பிலும் குழம்பிப் போயுள்ள வடக்கு மாகாண சபையின் ஆட்சியாளர்கள் தமக்குள் குடுமிச் சண்டை செய்து சபையை குழப்பி சபையை கடைசிக் காலத்தில் ஆளுநர் கலைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
மாகாணசபையை ஆளுநர் கலைக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டு செயற்பாடுகளை மேற்கொள்வதானது இழந்துபோன அரசியலை அனுதாபத்தினூடாக பெற்றுக்கொள்வதற்காகவே தவிர மக்கள் நலனுக்கானதாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை. இதற்காககத்தான் இன்று சபையை கலைக்க முடியமா? முடியாதா? என்று விவாதித்துவருகின்றனர்.
இவர்களது செயற்றிறனற்ற செயற்பாடுகளே வடக்கு மாகாணம் அனைத்து வகையிலும் ஏனைய மாகாணங்களை விட பின்தங்கியுள்ளது என்றும் சுட்டிக்காட்டிய அவர் மக்கள் நலன்களை முன்னிறுத்தாது மக்களை ஏமாற்றி தமது சுயலாபங்களை மட்டும் அனுபவிப்பவர்கள் தாமகவே அப்பதவிகளை விட்டு ஒதுங்கிக் கொள்வதே சிறந்ததாகும். இதையே இன்று தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர் என்றும் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|