வருமானத்தை விட செலவு அதிகம் – மின்சார சபை 61,200 கோடியை கடனாக செலுத்த வேண்டியுள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, August 11th, 2022

மின்சார விநியோகஸ்தர்கள் மற்றும் அரச வங்கிகளுக்கு 61,200 கோடி ரூபாவை மின்சார சபை கடனாக வழங்கவேண்டியுள்ளதையடுத்தே தற்போது மின் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் நேற்று சபையில் கருத்து தெரிவித்த அவர், இவ்வருடத்தின் கடந்த 07 மாதங்களில் மின் உற்பத்திக்கான செலவு 3,300 கோடி ரூபாவாக உள்ளதுடன் 2000 கோடி ரூபாவை மட்டுமே மின்சார சபை வருமானமாகப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் மின்சார சபை சுமார் 61,200 கோடி ரூபாவை மின் விநியோகஸ்தர்கள், மற்றும் மின் கொள்வனவுக்காக செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மின்சார சபையின் கோரிக்கைக்கமைய பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியுடனேயே மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்கட்டண திருத்தத்தின் ஊடாக நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் திறைசேரியுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மின்உற்பத்தி நடவடிக்கைகளில் ஏற்படும் செலவுக்கும் கிடைக்கும் வருமானத்திற்குமிடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகிறது.

2,460 கோடிரூபா நிதியை செலவழித்துள்ளதுடன்,மின் விநியோகத்தின் ஊடாக 2170கோடி ரூபாவையே பெற்றுக்கொண்டுள்ளது.

பல்வேறு காரணங்களினால் மின்சார சபை தொடர்ந்தும் நட்டத்தை எதிர் கொண்டுள்ளது. தனியார் மின்நிலையங்கள், அரச வங்கிகள்,மின் விநியோகஸ்தர்கள் ஆகியோருக்கு 61,200 கோடி ரூபாவை மீளச் செலுத்த வேண்டியுள்ளது.மின்சார சபையின் நிதி நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய வேண்டுமாயின் மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கோள்வது தவிர்க்க முடியாததாகும்.

மின்கட்டணத்தை அதிகரிக்காமல் இலங்கை மின்சார சபையின் நிதி நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் ஏதேனும் திட்டங்கள் இருக்குமானால் எதிர்தரப்பினர் அதனை தாராளமாக முன்வைக்கலாமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

எரிபொருள் கூட்டுத்தாபனம் உட்பட நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களுக்கு வருடத்திற்கு மூன்று போனஸ் வழங்கப்படுதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் எரிபொருள் மற்றும் எரிவாயு கிடைக்காதது அரசாங்கத்தின் தவறே தவிர மக்களின் தவறல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கூட்டுத்தாபனம், துறைமுகம், மின்சார சபை போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான மாதாந்த சம்பளத்தைப் பெற்று வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்குவதே மிகவும் பொருத்தமானது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று வியாழக்கிழக்கிழமை மற்றும் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை ஆகிய தினங்களில் மின்தடை அமுல்படுத்தப்பட மாட்டாதென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியால மின்தடை அமுப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்படி, மாலை 6 மணிமுதல் 9 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்தடை அமுப்படுத்தப்படுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

000

Related posts: