வன்முறையைக் கையாண்டு அநாகரிகமான முறையில் நசுக்க முற்பட்டமையை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்!

Saturday, September 10th, 2016

யாழ். உடுவில் மகளிர் கல்லூரியில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை நன்கு அவதானித்து வந்துள்ளோம். இப்பாடசாலையின் அதிபர் நியமனம் தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்ட போது  அப்பாடசாலையின் மாணவிகள் சிலரால் ஜனநாயக ரீதியாகவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது முன்னெடுக்கப்பட்ட நோக்கம் சரியாகவோ அல்லது தவறாக இருந்தாலும் கூட  அம்மாணவிகள் மேற்கொண்ட ஜனநாயக ரீதியான செயற்பாட்டை மாணவிகள் மேல் வன்முறையைக் கையாண்டு அநாகரிகமான முறையில் நசுக்க முற்பட்டமையை இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ளது.

என  நேற்று வெள்ளிக்கிழமை(09) இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் நடாத்திய தொடர்ச்சியான போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை (09) இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலினின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இம்மாணவிகள் மேல் மேற்கொள்ளப்பட்ட அநாகரிகமான செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் செய்திகளாகவும் வீடியோ ஆதாரங்களுடனும் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும் கூட  இதுவரை எவ்விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது நடந்து முடிந்த ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்துகின்றது. மிக அண்மைக்காலமாக மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மட்டில் அதீத அக்கறைகொண்டவர்கள் போல் செயற்பட்டு வந்த சட்டம் இன்றுவரை உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகள் தாக்கப்பட்டமைக்கு காரணமானவர்கள் மீது எவ்விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதன் காரணம் ஏன்? என்பது புரியவில்லை.

எனவே ,சட்டம் அனைவருக்கும் சமமாக பின்பற்றப்படவேண்டும் என்பதுடன் வன்முறையைக்  கையாண்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் எனவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

123

uduvil

Related posts: