வடபகுதி மக்களுக்கு நாளை தீபாவளிக் கொண்டாட்டம் – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்  தவநாதன் தெரிவிப்பு!

Monday, October 22nd, 2018

கடந்த 5 ஆண்டுகளாக நரகாசுரனின் பிடியில் சிக்கி தவித்துவந்த வடபகுதி தமிழ் மக்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிலிருந்து விடுதலை கிடைக்கிறது. அந்தவகையில் அன்றையதினம் அவர்களுக்கு தீபாவளி தினமாகவே அமையவுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு  அன்றைய அரசு வடபகுதிக்கான தேர்தலை அறிவித்தவுடன் பதவியை எப்படியாவது கைப்பற்றி தமது சுயலாபங்களை மேற்கொள்வதற்காக ஒரு கூட்டாக இணைந்து அதன் ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றியிருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு.

ஆட்சியை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மலர்ந்தது தமிழரசு என்று மார்தட்டிக்கொண்டு ஊடகங்களுக்கு அறிக்கை விட்டு தம்மை கதாநாயகர்களாக்கியிருந்தனர்.

ஆனாலும் அவர்களிடம் ஆற்றலும் ஆளுமையும் மக்கள் மீதான அக்கறையும் ஒரு சிறு துளியளவேனும் அதன் ஆட்சிக் காலத்தில் காணப்படவில்லை. அத்துடன் மக்களுக்கான எந்தவொரு தேவைப்பாடுகள் தொடர்பில் 5 ஆண்டு காலப்பகுதியிலும் அவர்களால் முன்னெடுக்க முடியவில்லை.

இந்த காலகட்டத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த தரப்பினர் தமது சுயநலங்களையும் தமது கௌரவங்களையும் நிலைநிறுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக செயற்பட்டனர். இதனால் வடபகுதியின் ஒட்டுமொத்த அபிவிருத்தியும் முடக்கப்பட்டது.

நாட்டில் ஆட்சி  மாற்றம் ஏற்படும் வரையில் அதாவது 2015 ஆம் ஆண்டுவரையில் வடக்கில் எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனக்கிருந்த அமைச்சரவை அதிகாரத்தை கொண்டு பல பணிகளை மேற்கொண்டு வந்திருந்தமையால் வடமாகாண சபையின் ஆட்சியாளர்களது ஆளுமையின்மைத்தனம் மக்களிடம் வெளிபடுவது குறைவாக இருந்தது. ஆனாலும் நாம் வடக்கின் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து அதனை சபை அமர்வுகளில் ஆரம்பம் தொட்டே வெளிப்படுத்தி வந்திருந்தோம்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வடக்கின் அமைச்சரவைக்குள் மோசடிகள் மலிந்துகாணப்பட்டது. தத்தமது கௌரவங்களுக்காக முதலமைச்சர்,  அமைச்சர்கள் நீதிமன்றம் வரை ஏறி இறங்கினர். ஆனாலும் ஒருதடவை கூட மக்களுக்கான தேவை ஒன்றுக்காகவேனும் அவர்கள் நீதி மன்றும் ஏறவில்லை. இதனால் முழுமையாக மக்கள் தேவைகள் முடக்கப்பட்டன.

ஒரு மாகாணசபை முழுமைபெற்று மக்களுக்கானதாக இயங்கவேண்டுமானால் குறைந்தது 300 நியதிச்சட்டங்களாவது உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இந்த வடக்கு மாகாணசபையில் தனிநபர்களது கௌரவ பிரச்சினைகள் காரணமாக அது நடைபெறாது போனதால் பல வேலைத்திட்டங்கள் முடக்கப்பட்டன. அதனால் மக்கள் அபிவிருத்தியை இழக்க நேரிட்டது. இன்று அதை மக்கள் முழுமையாக உணர்ந்துவிட்டனர்.

இவ்வாறான ஆளுமையற்றவர்களது ஆளுகைக்குள் கடந்த 5 வருடங்களாக அகப்பட்டு தத்தளித்து வந்த தமிழ் மக்களுக்கு வரும் 25 ஆம் திகதி விடுதலை கிடைக்கவுள்ளது. அந்த விடுதலையை வடக்கு மக்கள் தீபாவளி தினம் போன்று கொண்டாடவும் வாய்ப்புள்ளது.

அந்தவகையில் வடபகுதி மக்கள் அடுத்த மாகாணசபையின் ஆட்சிப் பொறுப்பை ஆற்றலும் ஆளுமையும் உள்ளவர்களிடம் அதாவது கடந்த காலத்தில் வடக்கில் பெரும்பணியாற்றியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எமது விருப்பாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: