வடக்கை முற்றுகையிடுகிறதா கொரோனா – ஒரேநாளில் 61 பேருக்கு தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி பரவும் அபாயம்!

Sunday, February 28th, 2021

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களிடையே பெரும் அச்சநிலை உருவாகியுள்ளது. இதன்காரணமாக சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை சுகாதார தரப்பினர் இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில்  நேற்று சனிக்கிழமை 236 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 52 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதில், 150 கைதிகளிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்ட நிலையில், அவர்களில் 51 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஆசிரியை ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவரது கணவர் ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக கொழும்பில் பணியாற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட 463 பேரின் பி.சி.ஆர். பரிசோதனையில் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட மூன்று நோயாளிகளுக்கும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கொடிகாமத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னார் பொது வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்ட ஒருவர் மற்றும் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 81 வயது வயோதிபப் பெண் ஒருவருக்கும் அவரது பேரனுக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் 15 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் ஆறு பேருக்குக் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: