வடக்கு வாழ் மக்கள் கடந்த பல வருடங்களாக முகங்கொடுத்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்’பட்டுள்ளது – இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவிப்பு!
Saturday, October 30th, 2021வடக்கு வாழ் மக்கள் கடந்த பல வருடங்களாக முகங்கொடுத்து வருகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக கடல் நீரிலிருந்து தூய குடிநீரினை பெற்றுக் கொள்ளும் வேலைத் திட்டத்தினை ஆரம்பித்தல் மற்றும் நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றதாக கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இதுவரை யாழ். மாவட்டத்தில் பொதுமக்களில் 14 சதவீதமானவர்களுக்கும், யாழ்ப்பாண நகரத்தில் 4 சதவீதமானவர்களுக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நீர் வழங்கல் முறைமைக்கு பதிலாக இவ்வேலைத் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் வாழும் அனைத்து பொதுமக்களுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்குமெனவும், நயினாதீவு உட்பட 3 தீவுகளில் வாழும் மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மக்கள் மயப்படுத்தியமையினால் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த,வடக்கில் தாகத்திற்கு முற்றுப் புள்ளி என்ற தலைப்பில் இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கடல் நீரினை சுத்தமான குடிநீராக மாற்றுவதற்காக ஒரு கியுபிக் மீட்டர் நீருக்கு, அதாவது 1,000 லீட்டர் நீருக்கு 120 ரூபா நிதி செலவாகின்றது. எனினும் அச்சுத்தமான நீரானது ஒரு கியுபிக் மீட்டரானது 10 ரூபாவுக்கே பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.
எனினும் இரணைமடு குளத்திலிருந்து நீரினை பெற்று வடக்கு வாழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடிந்தால் இதனை விடவும் குறைந்த தொகைக்கு சுத்தமான நீரினை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும். எனினும் அதற்கு பல்வேறு அரசியல் குழுக்கள் தடையாக இருப்பதனால் கடல் நீரினை சுத்திகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால் அதற்கு அதிக தொகையினை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக 2025 இல் அனைவருக்கும் குடிநீர் பெற்றுக் கொடுக்கும் கொள்கையின் மற்றுமொறு வேலைத் திட்டம் ஒன்றாக வடக்கு வாழ் மக்களுக்காக சுத்தமான நீரினை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டத்தினை அறிமுகப்படுத்தலாம். இலங்கையில் சுத்தமான குடிநீரின்றி வாழும் 46.6 சதவீதமானவர்களுக்கு அடுத்து வரும் 03 வருடங்களிற்குள் சுத்தமான குடிநீர் பெற்றுக் கொடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக நீர்வழங்கல் அமைச்சினால் சுத்தமான குடிநீர் தேவைக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கும் நேர்த்தியான திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குடிநீர் தேவையினை பூர்த்தி செய்வதற்காக துரித தீர்வுகள், நடுத்தர தீர்வுகள் மற்றும் நீண்ட கால தீர்வுகள் என தீர்வுகளை இனங்கண்டு தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வட மத்திய மாகாணம் போன்ற நீரினால் பொதுமக்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு நனோ தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி சுத்தமான குடிநீரினை பெற்றுக் கொடுக்கும் திட்டம் துரித தீர்வாக செயற்படுத்தப்படுகின்றது.
நடுத்தர தீர்வாக பிரதேசங்களில் காணப்படுகின்ற நீர் ஊற்றுகள், நீர்தேக்கங்கள், கால்வாய்கள் மற்றும் ஆறுகளின் நீரினை சுத்திகரித்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றது. இவ்வனைத்து திட்டங்களும் வெற்றியடைவதற்காக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் மற்றும் நீர்வழங்கல் சபை ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்பும் நீர் வழங்கல் அமைச்சுக்கு கிடைப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும், பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரினை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சில ஊடக நிறுவனங்கள் இச்செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களை திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. எனினும் இனங்காணப்பட்ட 4 ஆயிரத்து 332 சமூக நீர் சங்கங்களை ஒன்றிணைத்து அவர்களது பிரதேசங்களில் காணப்படுகின்ற குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் திட்டமொன்றும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்து வருகின்ற 3 வருடங்களிற்குள் அனைத்து வகையான குடிநீர் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு 2025 ஆம் ஆண்டில் அனைவருக்கும் குடிநீரினை பெற்றுக் கொடுப்பதற்கு எமது அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|