வடக்கிலுள்ள வைத்தியசாலைகளிலும் கொரோனா தொற்றாளார்களின் விடுதிகள், நிரம்பிய நிலையிலேயே காணப்படுகின்றது – சுகாதார பணிப்பாளர் தகவல்!

Thursday, August 5th, 2021

வடக்கிலுள்ள வைத்தியசாலைகளின் கொரோனா தொற்றாளார்களின் விடுதிகள்,இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்கள் என்பன நிரம்பிய நிலையிலேயே காணப்படுகின்றதென வடமாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இன்று ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய  போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போது வடக்கிலும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை தினமும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.

அவ்வாறு இனங்காணப்படுபவர்களில் தொற்றுநோய் அறிகுறி இல்லாதவர்கள் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். வடமாகாணத்தில் 9 இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்கள் இயங்கி வருகின்றன. பெரும்பாலும் அனைத்து இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களும் நிரம்பிய நிலையிலேயே காணப்படுகின்றது.

தொற்றுநோய் அறிகுறிகள் உள்ள அதாவது காய்ச்சல் இருமல் உடையவர்கள் வைத்தியசாலைகளின் கொரோனா விடுதிகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள் .

வடமாகாணத்தைப் பொறுத்தவரையிலே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை,வவுனியா மாவட்ட வைத்தியசாலை ,மன்னார் மாவட்ட வைத்தியசாலை, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை, யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கின்ற தெல்லிப்பழை, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளென மொத்தம் ஒன்பது வைத்தியசாலைகளிலும் இந்த கொரோனா  நோய் அறிகுறி உள்ளவர்களுக்கான சிகிச்சை வழங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. பெரும்பாலும் வைத்தியசாலைகளிலுள்ள அனைத்து சிகிச்சை நிலையங்களும் தற்பொழுது நிரம்பிய நிலையிலேயே காணப்படுகின்றது.

அவர்கள் பலருக்கு ஒக்சிஜன் வழங்க வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. தற்போது அவர்களுக்கு போதுமான ஒக்சிஜன் வழங்கப்படுகின்றது.

வட மாகாணத்தை பொறுத்த வரையிலே 4 ஒக்சிஜன் மீள்நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ,கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை, வவுனியா மாவட்ட வைத்தியசாலையென  நான்கு  வைத்தியசாலைகளிலும் ஒக்சிஜன் சிலிண்டர்களை மீள்நிரப்பிக் கொண்டிருக்கின்றோம்.

இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, மன்னார் மாவட்ட வைத்தியசாலை என்பன அனுராதபுரத்தில் இருக்கின்ற ஒக்சிஜன் வழங்கும் நிறுவனத்திடமிருந்தும் ஒக்சிஜன் சிலிண்டர்களை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

தற்போதைய நிலைமையில் எங்களிடம் இருக்கின்ற கட்டமைப்பை கொண்டு ஒக்சிஜன் தேவையை சமாளிக்க கூடிய நிலையே காணப்படுகின்றது. தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் சிக்கல் நிலைமை உருவாகும். அதேவேளை மேலும் சில வைத்தியசாலைகளில் தொற்றாளர்களுக்கான விடுதிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்

Related posts: