ரஷ்யாவுக்கு உதவினால் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் – சீனாவை கடுமையாக எச்சரித்த அமெரிக்கா!

Sunday, March 20th, 2022

ரஷ்யாவுக்கு உதவிகள் செய்தால் அதன் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் என சீனாவை அமெரிக்க அதிபர் பைடன் எச்சரித்துள்ளார்.

உக்ரைனில் போர் நீடிக்கும் நிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். அப்போது பேசப்பட்டவை குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்த ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகள் கொடுத்து உதவினால் சீனா, அமெரிக்கா இடையிலான இரு தரப்பு வர்த்தகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என சீன அதிபரை அமெரிக்க அதிபர் எச்சரித்ததாக அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் உக்ரைன் – ரஷ்ய பிரச்னைக்கு தூதரக பேச்சுகள் மூலம் தீர்வு காண்பதே சரி என பைடன், ஷி ஜின்பிங் ஆகிய இரு அதிபர்களும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு உதவாமல் விலகியிருந்தால் அதற்கான பலன்கள் கிடைக்கும் என சீனாவுக்கு ஆசை காட்டும் நோக்கில் இந்த அழைப்பு மேற்கொள்ளப்படவில்லை எனவும் அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: