யாழ். மாவட்டம் வழமைக்கு திரும்பினாலும் கொரோனா தொற்று அபாயத்திலிருந்து இன்னும் நீங்கிவிடவில்லை – யாழ். அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு!

Sunday, May 10th, 2020

நாளை 11 ஆம் திகதியிலிருந்து யாழ். மாவட்டம் அரசாங்கம் மற்றும் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதுடன் அனைத்து செயற்பாடுகளும் வழமைபோன்று இடம்பெறும். ஆனாலும் கொரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.

எனினும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுப் போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்கள், சிகை அலங்கரிப்பாளர்கள், உணவக உரிமையாளர்கள் சுகாதார திணைக்களத்தினரின் சுகாதார நடைமுறையை பின்பற்றி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் யாழ். மாவட்டம் வழமைக்கு திரும்புகின்றபோதிலும் கொரோனா தொற்று அபாயம் இன்னும் நீங்கிவிடவில்லை என தெரிவித்த அரச அதிபர் இயன்றளவு முக்கியமாக தொழில்களுக்கு சென்றுவரும் அரச, தனியார் உத்தியோகத்தர்கள் பொதுப் போக்குவரத்தினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பயன்படுத்தலாம். அல்லது தமது தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதும் சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனியார் போக்குவரத்து சபையினருக்கு பல சுகாதார நடைமுறைகளை குறிப்பிடட போதும் அவர்களால் குறைந்த அளவு மக்களை போக்குவரத்தில் உள்ளடக்குவதில் நட்டம் உள்ளது என்றும் சுட்டிக் காட்டினார்.

பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆரம்பமாவதத்திற்கு இன்னும் அனுமதி அளிக்கப் படவில்லை. யாராவது தனியார் கல்வி நிலையம் ஆரம்பிப்பார்களாயின் சட்ட நடைமுறைக்குட் படுத்தப்படுவார்.

சிறு கைத்தொழில் வியாபாரம், மீன்பிடி மற்றும் வணிகம் என்பனவும் அனுமதி அளிக்கப் படுவதுடன் அவசர பயணிகள் தவிர்ந்த எவரும் மாவட்டம் விட்டு மாகாணம் செல்ல அனுமதி  வழங்கப்படமாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: