யாழ்.பல்கலை மாணவர் ஒன்றிய தலைவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Thursday, July 21st, 2016

யாழ்.பல்கலையில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சிங்கள மாணவர்களுக்கு எதிரான முறைப்பாடென்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தமிழ் மாணவர்கள் சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் த.சிசிதரனினாலேயே இம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது தமிழ் சிங்கள மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றிருந்தது.

குறித்த மோதல் சம்பவத்தில் பலர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியிருந்தனர். இருந்த போதும் சிங்கள மாணவர் ஒருவர் தொடர்ந்தும் கொழும்பு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறு சிகிச்சை பெற்றுவரும் சிங்கள மாணவர் தன்னை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் த.சிசிதரன் தாக்கியதாக வாய்முறைப்பாடு ஒன்றினை பொலிஸாருக்கு வழங்கியிருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாம் சிசிதரனை விசாரணைக்கு வருமாறு கோப்பாய் பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சொல்லாத அவர் நேற்று யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

பிணை அனுமதி வழங்கிய நீதவானின் அறிவுறுத்தலுக்கு அமையா சிசிதரன் நேற்று மாலை கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சிங்கள மாணவர் வழங்கிய வாக்கு மூலத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பில் தனது வாக்கு மூலத்தினை பதிவு செய்திருந்தார்.இதன் பின்னர் தன் மீதும் சிங்கள மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து சிங்கள மாணவர்களுக்கு எதிராக தமிழ் மாணவர்கள் சார்பில் முறைப்பாடு ஒன்றினையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: