யாழ். பல்கலைவிடயத்தில் அரசியல் தலையீடு வேண்டாம்!

Thursday, July 21st, 2016
சில தினங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பல்கலைக்கழக விவகாரத்தை மாணவர்களாகிய நாமே பார்த்துக்கொள்கின்றோம். வெளியிலிருந்து யாரும் வந்து சமாதானப்படுத்த தேவையில்லை, மாணவர்களாகிய நாம் ஒற்றுமையாகவே உள்ளோம். எங்களுக்குள் இடம்பெறும் சிறு சிறு விவாதங்களுக்கு அரசியல் தலையீடுகளே வேண்டாம் எனவும் கூறினார்.

மாணவர்களாகிய எங்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காத அரசாங்கம் எவ்வாறு பிரச்சினைகளை மட்டும் தீர்க்கும்? என கேள்வி எழுப்பிய லஹிரு, இந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு தாம் ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும். இதற்கான தீர்வை தாமே எடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த லஹிரு, மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை உடனடியாக மூடப்பட வேண்டும். அவ்வாறு மூடாவிட்டால் நாட்டில் உள்ள சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பாரிய நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தும் எனவும் கூறினார்.

இதில், வைத்தியர் சங்கம், ஆசிரியர் சங்கம், மாணவர்கள் சங்கம், தொழிற்சங்கங்கள் என 20க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுக்கும் எனவும் இதன்போது லஹிரு எச்சரித்தார்.

இதற்காக தாம் ஒரு புதிய குழுவை உருவாக்கியுள்ளதாகவும், மாணவர்களுக்கான சைட்டம் எதிர்ப்பு அமைப்பு என பெயரிட்டுள்ளதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர தெரிவித்தார்.

Related posts: