யாழ். பல்கலைக் கழக ஊழியர்கள் அனைவரும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிப்பு

Thursday, March 31st, 2016

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை(31) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக பல்கலைக் கழகத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் முடங்கியுள்ளன.

அனைத்துப் பல்கலைக் கழகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் கூட்டுக் குழுவின் ஆதரவில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையிலேயே யாழ்.பல்கலைக் கழக ஊழியர்களும் இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். குறித்த போராட்டத்தில் யாழ்.பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ff79124d-779d-42fd-a9a4-2db3c4a87dec

குறித்த போராட்டம் தொடர்பாக ஊடகங்களுக்குக்  கருத்துத் தெரிவித்த யாழ். பல்கலைக் கழக ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.தங்கராஜா- பல்கலைக் கழக மானிய ஆணைக் குழுவுக்குட்பட்ட பல்கலைக் கழக கல்வி சார், கல்வி சாரா ஊழியர்களுக்கான சம்பளத்திலுள்ள சம்பள வேறுபாடு அதாவது கல்வி சாரா ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற மாதப் படிக் கொடுப்பனவு வழங்கப்படாத காரணத்தால் அதனை வழங்க வேண்டும் என்பது எமது முதலாவது கோரிக்கையாகும். பல காலமாகப் பல்கலைக் கழக மானிய ஆணைக் குழுவுக்குக் கீழ் இயங்குகின்ற கல்வி சார், கல்வி சாரா ஊழியர்களுக்கான ஓய்வூதியத்  திட்டத்தில் இற்றை வரைக்கும் எந்தப் பரிசீலனையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே, அந்தக் கொடுப்பனவு தொடர்பிலும் மீள் பரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் காப்புறுதித் திட்டம், மொழிக் கொடுப்பனவு, நியமனங்களின் போது அரசியல் தலையீடு இடம்பெறக் கூடாது போன்ற கோரிக்கைகளை வைத்துத் தான் நாங்கள் இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆகவே, சம்பந்தப்பட்ட அனைத்து சாராரும் எமது கோரிக்கைகளுக்கு நல்லதொரு முடிவினை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

Related posts: