யாழ். பல்கலைக்கழக துணை வேந்தராக விக்னேஸ்வரன் !

Friday, April 28th, 2017

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக பல்கலைக்கழக விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் விக்னேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோன் அறிவிப்பு விடுத்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதியுடன் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக்காலம் நிறைவடைந்த போதிலும் புதிய துணைவேந்தர் நியமனத்தில் ஏற்பட்ட இழுபறி காரணமாக நேற்று வரை நியமனம் தாமதித்திருந்தது.

கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் நடத்தப்பட்ட துணைவேந்தர் தெரிவில் முன்னிலை வகித்த மூவரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையுடன் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

நடைமுறைகளின் படி துணைவேந்தர் தெரிவில் முதலிடம் பெற்றிருந்த பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களுக்கு செய்தி கசிந்திருந்தது.

எனினும் துணைவேந்தர் நியமனம் உறுதிப்படுத்தப்படாத காரணத்தினால், தற்போதைய துணைவேந்தரை மறு அறிவித்தல் வரை கடமைகளைத் தொடருமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடந்த 24ஆம் திகதி மாலை பணித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த 24ஆம் திகதி முதல் மூன்று வருட காலத்துக்கு பேராசிரியர் விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அழுத்தங்கள் மற்றும் வெளித் தலையீடுகளை ஏற்றுக் கொள்ளாததன் பின்னணியிலேயே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related posts: