யாழ்.பதில் சுகாதார வைத்திய அதிகாரி விவகாரம் – குழப்பத்தில் வைத்திய அதிகாரி!

Saturday, June 15th, 2019

யாழ். மாவட்ட சுகாதார பதில் வைத்திய அதிகாரி நியமன விடயம் தொடர்ந்தும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தும் நிலையில் தற்போதைய பதில் சுகாதார வைத்திய அதிகாரியை உடன் விலகுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கடும் அழுத்தம் வழங்கியதோடு எச்சரிக்கையும் விடுத்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தியை சுகாதார அமைச்சு யாழ்ப்பாணம் மாவட்ட பதில் சுகாதா வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்ட விடயம் மத்திக்கும் மாகாணத்திற்குமான அதிகாரப் போட்டியாகவும் பொறுப்புக் கூறல் விடயத்தில் கேள்விக்கு உட்பட்டதாகவும் கருதப்பட்ட நிலையில் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரை பதில் மாவட்ட சுகாதார வைத்தியப் பணிப்பாளராக பணியாற்ற வேண்டாம் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் எழுத்தில் கடிதம் வழங்கியிருந்தார்.

குறித்த விடயம் மீண்டும் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சுகாதார அமைச்சினால் மாகாண சுகாதாரப் பணிப்பாளரிற்கு முகவரியிட்டு வைத்தியர்கள் நியமனம் கொழும்பு அரசிற்குரியது எனவும் குறித்த விடயம் வடக்கு மாகாண சுகாதார நியதிச் சட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் வைத்தியர்கள் நியமனம் அரசிற்குரியதாக இருப்பினும் மாகாண அரசின் ஒப்புதலுடனேயே மேற்கொள்ளப்படமுடியும் என சுட்டிக்காட்டி சத்தியமூர்த்தியை முழுமையாக விடுவிக்குமாறு ஆளுநரின் பணிப்பின் பெயரில் ஆளுநர் செயலக செயலாளர் மாகாண சுகாதாரப் பணிப்பாளரிற்கு கடிதம் அனுப்பியதன் பிரகாரம் குறித்த விடயம் மீண்டும் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்திக்கு எழுத்தில் வழங்கப்பட்ட நிலையில் மத்திக்கும் மாகாணத்திற்குமான முறுகல் உச்சம் பெற்றதோடு மாகாணத்திற்கான அதிகாரமும் கேள்விக்கு உட்பட்ட நிலமை காணப்பட்டது.

இந்த நிலையில், நேற்றைய தினம் வடக்கு மாகாண சுகாதார சேவையின் அபிவிருத்தி தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தலமையில் கொழும்பில் ஓர் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் வடக்கின் மாகாண சுகாதாரப் பணிப்பாளர், 5 மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரிகளாக சர்ச்சையில் உள்ள இரு வைத்திய அதிகாரிகளான தேவநேசன், சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் சமூகமளித்திருந்தனர். இதன்போது நாம் வழங்கிய கடிதத்தின் பிரகாரம் சத்தியமூர்த்தி பணியாற்ற வேண்டும். தேவநேசன் அந்த இடத்தினை விட்டுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு சத்தியமூர்த்தி பொறுப்பேற்றதும் தேவநேசன் ஊர்காவற்றுறைக்கு செல்ல வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கடும் தொனியில் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட பதில் சுகாதார வைத்திய அதிகாரி தேவநேசன் குறித்த விடயத்தை எழுத்தில் வழங்குமாறு கோரினார். இவ் விடயம் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் யாழ்ப்பாணம் தொடர்பில் அதிகம் ஆராயப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: