யாழ்.நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவானின் சடலம் மீட்பு!

Saturday, May 19th, 2018

யாழ்.நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவானின் சடலம் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.  யாழ்.செம்மணி வீதியைச் சேர்ந்த இராமையா ஜெயராசா (ஜெயம்) வயது (66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
5 பிள்ளைகளின் தந்தையாரான இவர் கடந்த 17 ஆம் திகதி மாலை முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன இவரை குடும்பத்தினரால் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை இவரது மனைவி யமுனா ஏரிக்கு தண்ணீர் அள்ளச் சென்ற வேளையில், ஏரிப் பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது.

இறந்த உடலின் துர்நாற்றம் வீசுவதாக மனைவி அந்த பிரதேச கிராம அலுவலருக்கு அறிவித்துள்ளார். கிராம அலுவலர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர். சடலம் தொடர்பான விசாரணையினை மரணவிசாரணை அதிகாரி முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யமுனா ஏரி தண்ணீரை அப்பிரதேச மக்கள் பயன்படுத்தி வருகின்றதாகவும், அந்தப் பகுதியில் பாதுகாப்பு வேலி இல்லாத நிலையில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றதாகவும், யமுனா ஏரி நீரை பாதுகாப்பதற்குரிய பாதுகாப்பு வேலை அமைத்து தருமாறு பல தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்த நிலையில் எவரும் பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியதுடன், இவ்வாறு கடந்த காலத்திலும் யமுனா ஏரியில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: