யாழ்ப்பாணம் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவர் திடீர் மரணம்: இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்வு – சுகாதார அமைச்சு!

Friday, April 24th, 2020

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கடற்படை வீரர்கள் மேலும் 30 பேர் இன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராணுவத்தளபதி உறுதிபடுத்தியுள்ளார்.

வெலிசர கடற்படை முகாமில் நேற்றைய தினம் 30 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இதுவரை குறித்த முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 60 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஜா – எல சுதவெல்ல பிரதேசத்தில் சிலரை தனிமைப்படுத்தலுக்கு அழைத்து சென்ற வெலிசர கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியமையை தொடர்ந்து 60 பேருக்கு குறித்த தொற்று பரவியுள்ளதாகவும், பொலநறுவை லங்காபுர பகுதியில் 12 கிராமங்களை சேர்ந்த 6000 குடும்பங்கள் இதனால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளது மை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடற்படை முகாமில் உள்ள இலங்கை கடற்படையின் சிப்பாயுடன் தொடர்புடைய மேலும் பல கடற்படை வீரர்கள் விடுமுறையில் தத்தமது பிரதேசங்களுக்கு சென்றுள்ளதாகவும் இதன் காரணமாக இன்னும் பல தொற்றாளர்கள் இனங்காணப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவ்வாறு விடுமுறையில் கடற்படை சிப்பாய்கள் சென்றிருக்க வாய்ப்பிருப்பின் அவர்களது உறவுகள் மற்றும் அவர்கள் சென்ற இடங்களில் உள்ளவர்களும் குறித்த தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சுகாதார தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்காக கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து அழைத்துவரப்பட்ட கொரோனா சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம் கொடிகாமம் விடத்தற்பளை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் எம்..நசார் என்ற நபர் காய்ச்சல் காரணமாக கடந்த 22 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இதற்கமைய கடந்த 23 ஆம் திகதி அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை என பி.சிஆர் பரிசோதனை மூலம்  உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்தநிலையில் நேற்று இரவு அவர் வைத்தியசாலையிலையே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இவரது குடும்பத்தினரும் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்திலேயே தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா சந்தேகத்தில் அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு கொரோனோ தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்ட பின்னர் மாரடைப்பு ஏற்பட்டே அவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் .சத்தியமூர்த்தி  மேலும் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தில் இருந்து PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 529 பேரில் எவருக்கும் கொரோனா தொற்று  இல்லை என விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குறித்த சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில்  பேலியகொடை மீன் சந்தை கட்டிடத்தை மொத்த விற்பனைக்காக நாளைய தினம் மீண்டும் திறக்கவுள்ளாதககவும் அதிகாலை 3 மணிமுதல் முற்பகல் 8 மணிவரை மீன்சந்தையை திறந்து வைப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பேலியகொடை மீன் வர்த்தகர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் கொழும்பு புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்த நபருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நெருங்கிப் பழகிய யாசகர்கள், போதைப்பொருள் பவனையாளர்கள் என 326 நபர்களை பொலிஸாரும், சுகாதார அதிகாரிகளும் தேடிவருவதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்.பல்கலைகழகத்தில் இராணுவத்தினரால் கொரோனா கிருமி நீக்கல் சிறப்பு நடவடிக்கை இன்று ம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் கொரோனோ வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் பல இடங்களிலும் கிருமித் தொற்று நீக்கல் மருந்து விசிறும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்மைய யாழ்.மாவட்டத்திலும் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்கள் அரச அலுவலகங்களிலும் பொலிஸ் நிலையங்களிலும் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் குறையவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி அண்மையில் தெரிவித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று எதிர்வரும் நாட்களில் இலங்கையில் ஆபத்தாக அமையும் என சுகாதார திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகமும் மருத்துவருமான பபா பலிஹவடன தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனவே அரசு அறிவித்துள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் தமது பாதுகாப்பை தாமே உறுதிப்படுத்தும் வகையில் வீட்டில் இருப்பது அவசியமாகும். எவருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கின்றது என யாருக்குமே தெரியாத சூழ்நிலை தற்போது காணப்படுவதால் சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.

Related posts: