யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 13 கலைப்பீட மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்க முடிவு !

Tuesday, March 28th, 2017

கடந்த-11 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட புதுமுக  மாணவர்களின்  வரவேற்பு நிகழ்வு நிர்வாகத்தின் அறிவுறுத்தலையும் மீறி இடம்பெற்றது. இதனையடுத்துப் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும், மாணவர்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்துப் பல்கலைக் கழக கலைப்பீடத்தில் சட்டத் துறை, இராமநாதன் நுண்கலைத்துறை தவிர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்திருந்தது. எனினும் இந்த முடிவிற்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.
இவ்வாறான சூழ்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 2014,2015 கல்வியாண்டுக்கான முதலாம், இரண்டாம் வருட மாணவர்களுக்கும், 2015, 2016 கல்வியாண்டுக்குரிய முதலாம் வருட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் கடந்த-20 ஆம் திகதி திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கப்பட்டது. எனினும்,  யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மூன்றாம், நான்காம் வருட மாணவர்களுக்கான கற்கை நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பமாகவில்லை.
இதன் போது இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பான குற்றச்சாட்டுக்களில் கலைப்பீடத்தின் 13 மாணவர்களிற்கு வகுப்புத் தடை விதிக்கப் பல்கலைக்கழக நிர்வாகம் இன்று செவ்வாய்க்கிழமை(28) முடிவு செய்துள்ளது. இதனையடுத்துக் கலைப்பீட 3 ஆம், 4 ஆம் வருட மாணவர்களுக்கான கற்கை நடவடிக்கைகள் நாளை புதன்கிழமை மீள ஆரம்பமாகும் எனப் பல்கலைக் கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

Related posts: