யாழ்ப்பாணத்தை கொரோனாவிலிருந்து பாதுகாக்க பொதுமக்களின் உதவி அவசியம் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை!

Tuesday, July 14th, 2020

யாழ்ப்பாணத்தில் கொரோனா அலையின் இரண்டாவது கட்மத்தை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு அனைத்து பொதுமக்களும்  சுகாதார திணைக்களத்தினருக்கு ஒத்துழைக்க வேண்டுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது கொரோனா அபாயம் மீண்டும் ஆரம்பித்துள்ள யாழ்ப்பாணத்தில் நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

யாழ்ப்பாண குடாநாட்டில்  ஆரம்பத்தில்  16 பேர்  தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில்  தற்போது 14 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் இவர்களில் மூன்று குடும்பம் கந்த காடு புனர்வாழ்வு நிலையத்துக்குச் சென்று வந்தவர்கள் என்ற அடிப்படையிலும் ஒரு  குடும்பம் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வருகை தந்தவர் என்ற அடிப்படையிலும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு  தனிமைப்படுத்தப்டுள்ளார்கள்.

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினை தடுக்கும் செயற்பாடானது சுகாதார திணைக்களம் ஏனைய திணைக்களங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்களுடைய செயற்பாட்டின் மூலமே யாழில்கொரோனாவை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம் தற்பொழுது இது  சமூகதொற்றாக உருவாக கூடிய  அபாயம் காணப்படுவதாக உணரப்படுகின்றது.

இந்த கட்டத்தில்  இரண்டாவது அலையாக அதாவது முன்னரோடு ஒப்பிடும்போது நாளாந்தம் அறிக்கையிடப்படுகின்ற புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது நோயாளர்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாகவே காணப்படுகின்றது.

யாழ் குடாநாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களும் மிகவும் விழிப்பாக இருந்து இந்த நிலைமையைச் சமாளிப்பதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சுகாதார பிரிவினரின் சுகாதாரநடைமுறைகளை பின்பற்றி அநாவசியமாக போக்குவரத்தில் ஈடுபடாது மக்கள்  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

மேலும் பாடசாலைகள் ஒரு கிழமைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் அலுவலகங்கள் யாவும் சீராக இயங்கி வருகின்றன எனினும் தேவையுடையவர்கள் மட்டும் அலுவலகங்களுக்கு வருகைதந்து  தங்களுடைய தேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அதே வேளையில் ஏனைய பொது தொடர்பு மற்றும் ஏனைய செயற்பாடுகளிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொது மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்

Related posts: