யாழ்ப்பாணத்து மூலை முடக்கெங்கும் பொலிஸார் சோதனை!

Saturday, November 18th, 2017

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டுக் கும்பல்களை அடக்கும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடக்கில் பணியாற்றும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுப்புக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

குடாநாட்டின் மூலைமுடக்கெல்லாம் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.  இவ்வாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனிடம் எடுத்துரைத்தார் வடக்குமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோ.

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் மேல் நீதிமன்ற நீதிபதிக்கும் பொலிஸ் உயர்அதிகாரிகளுக்கும் இடையே சிறப்புச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் சட்டமா அதிபரின் யாழ்ப்பாண மாவட்டப் பிரதிநிதி அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த் பங்கேற்றார்.

இதன் போதே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் யாழ்ப்பாண மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னான்டோ மற்றும் யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்.பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வடமாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவசர பணிப்புரையை பிறப்பித்துள்ளார்.

வாள்வெட்டு தொடர்பான வழக்கின் சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்கக்கோரும் பிணைமனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.  யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்தும் அச்சத்திலும் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் இந்தக் கைக்குண்டு வைத்திருந்த மற்றும் வாள்வெட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபருக்குப் பிணை வழங்குவது சமூகத்தின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குள்ளாக்கிவிடும் என அரச சட்டவாதி குறிப்பிட்டு அந்தப் பிணைமனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி அந்தப் பிணைமனு விசாரணையை ஒத்திவைத்தார். வாள்வெட்டுக் கலாசாரத்தை உடன் முடிவுக்கு கொண்டுவரும் வகையிலேயே நேற்றைய கூட்டம் நடைபெற்றது.

Related posts: