யார் ஆட்சிக்கு வந்தாலும் 2048 ஆம் ஆண்டு வரை கடனை செலுத்துவது தொடர்பான நெருக்கடியில் இருந்து இலங்கை மீள முடியாது – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Saturday, September 2nd, 2023

இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் எதிர்வரும் 2048 ஆம் ஆண்டு வரை கடனை செலுத்துவது தொடர்பான நெருக்கடியில் இருந்து மீள முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்..

வெளிநாட்டு கடனை திரும்ப செலுத்துவதை மறுசீரமைக்கும் வரை மாத்திரமே கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் அனைத்து மாகாணங்களின் அபிவிருத்தித் ‘திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

30 ஆண்டு யுத்த நிலைமை காரணமாக வீழ்ச்சியடைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய திட்டங்களுக்கு அரசாங்கம் பெருந்தொகை நிதியை செலவிட்டது. இவை கடனாகவும் உதவியாகவும் பெற்றுக்கொள்ளப்பட்டவை. நாடு என்ற வகையில் நாம் பெற்றுக்கொண்ட கடனை இன்னும் திருப்பி செலுத்தவில்லை என்ற காரணத்தினால் தற்போது பெரும் கடனை நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளோம்.

அத்துடன் வெளிநாட்டு கடனை மறுசீரமைக்கும் வரை நாட்டுக்கு எவ்வித வெளிநாட்டு கடன் உதவியையும் பெறமுடியாது.

இதன் காரணமாக வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் அபிவிருத்தித்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மீண்டும் கடன் உதவியை பெற்றுக்கொள்ள முடிந்தால் மாத்திரமே வீதிகள் உட்பட அனைத்து அபிவிருத்தி பணிகளையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும். இதற்கு எவ்வித அரசியல் தீர்வுகளும் இல்லை.

நாடு என்ற வகையில் நாம் செலுத்த வேண்டிய 36 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்வரும் 2048 ஆம் ஆண்டு வரை செலுத்தியாகவேண்டும்.

இதனால், எந்த தலைவரின் கீழ் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் கடன் நெருக்கடியில் இருந்து மீள முடியாது.

தற்போது நடைபெறும் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல ஆசிய அபிவிருத்தி வங்கி 3.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் விஷேட நிகழ்வுகள்!
இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக் கம்பனிகளுக்கு ஒருவார காலம் அவகாசம் - அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்...
மதுபானம் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க தீர்மானம் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் ச...